‘எப்படியெல்லாம் தினுசு தினுசா யோசிக்கிறானுங்க’ என்பது மாதிரி சமீபத்தில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு தானிய வகைகளை இறக்குமதி செய்து, அதை இங்கே விற்பனையும் செய்து வருகிறது.
சமீபத்தில், இந்த நிறுவனத்தின் மேனேஜருக்கு வணிக தொடர்பான விலைப்பட்டியலுடன் 238,500 டாலரை (கிட்டத்தட்ட ரூ.2 கோடி) அமெரிக்க வங்கி ஒன்றுக்கு அனுப்பி வைக்குமாறு வங்கி தகவல்களுடன் [email protected] என்ற ஐடியில் இருந்து மெயில் வந்துள்ளது. ஏற்கனவே இந்த வணிகத்தை பற்றி குறிப்பிட்ட நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததால், மேனேஜரும் மெயிலில் கூறியிருந்த வங்கி கணக்கிற்கு NEFT மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி பணம் அனுப்பி உள்ளார்.
அடுத்த நாள், ‘பணம் கிடைத்துவிட்டதா?’ என்று அந்த நிறுவனத்திடம் கேட்டபோது தான், அந்த நிறுவனம் அப்படி எந்த மெயிலும் அனுப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
உடனே, அந்த நிறுவனத்தின் மேனேஜர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் எந்த வங்கியில் இருந்து பணம் அனுப்பினாரோ, அந்த வங்கியில் கேட்டபோது பண பரிமாற்றம் நடந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர், பணம் அனுப்பப்பட்ட வங்கியிடம் பேசி அந்த பணம் மோசடியாளர் கைக்கு செல்லாமல் முடக்கப்பட்டு, பணம் அனுப்பப்பட்ட கணக்கிற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உதவி செய்துள்ளது.
இனி பணம் அனுப்ப சொல்லி எதாவது மெயில் வந்தால், ஏற்கனவே அதுகுறித்து பேசியிருந்தாலும் ஒரு முறை செக் செய்துவிடுவது அவசியம். உஷார் மக்களே!