Samsung Protest: நாளை 6-வது கட்ட பேச்சுவார்த்தை! – டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பங்கேற்பு!

கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்துவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, விரைந்து தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் அமைந்துள்ளது சாம்சங் இந்தியா ஆலை. இந்த ஆலையில் சுமார் 1,800 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கே டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ஆலையின் தொழிலாளர்கள் அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் ஆகிய பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த பிரச்னைகளை ஆலை நிர்வாகத்திற்கு எடுத்துக்கூறவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தொழிற்சங்கத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த சங்கத்தை சாம்சங் ஆலை அங்கீகரிக்கவில்லை.

இதனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி கிட்டத்தட்ட 1,200 ஆலை தொழிலாளர்கள் கடந்த மாதம் 9-ம் தேதி தங்களது போராட்டத்தை தொடங்கினர். இதுவரை, ஆலை நிர்வாகம் இவர்களிடம் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால், இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.

இதற்கிடையில் இந்தப் போராட்டத்தை முடிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் ஆலை நிர்வாகம் மற்றும் ஆலை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த மாதத்தின் முதல் நாள் (அக்டோபர் 1) காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். அடுத்த நாள், உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

இந்த நிலையில், நாளை 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொழிலாளர்களுடன் நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொள்ள உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு காண அமைச்சர்களுக்கு நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.