திரையில் ஒரு நடிகரை மக்கள் கொண்டாடித் தீர்த்து பெரிய ஸ்டாராக எவ்வளவு உயரத்தில் வைத்தாலும், அதே நடிகர் அரசியல் களத்துக்கு வரும்போது அதே வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். எதிர்பாராத அதிர்ச்சிகரமான தோல்விகள் கூட பரிசாகக் கிடைக்கலாம்.
அதில், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ஆரும் விதிவிலக்கு. தமிழகத்தில், எம்.ஜி.ஆருக்குப் பிறகு எத்தனையோ நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியபோதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த அளவுக்கான வெற்றியை மக்கள் வழங்கவில்லை. அதில், விஜயகாந்த் மட்டும் அரசியலிலும் மக்கள் மனங்களில் மாற்று சக்தியாக பார்க்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். பின்னாளில், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி என தமிழக அரசியலின் இரு ஆளுமைகளின் மறைவுக்குப் பின்னர், பலரும் அரசியலின் ஆழம் பார்க்க விரும்பினர். அரசியல் களம் அத்தனை சுலபமானதல்ல எனத் தெரிந்து கட்சித் தொடங்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த். கட்சியைத் தொடங்கி தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டவர் தற்போது கூட்டணியில் இணைந்திருக்கிறார். இந்நிலையில் தான் திரைத்துறையிலிருந்து நடிகர் விஜய்யும் பந்தக் கால் ஊன்றியிருக்கிறார்.
தமிழகத்தின் நிலவரம் இது என்றால், பக்கத்துக்கு மாநிலம் ஆந்திராவைப் பார்த்தால், அங்கும் என்.டி.ஆருக்குப் பிறகு சிரஞ்சீவி போன்றோர் அரசியலுக்கு வந்தார்கள், அப்படியே சுவடில்லாமல் விலகிப் போனார்கள். அதில், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் மட்டும் தாக்குப்பிடித்து மெது மெதுவாக அடியெடுத்து வைத்து இன்று மாநிலத்தின் துணை முதல்வராக உயர்ந்திருக்கிறார். கட்சி ஆரம்பித்து 10 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் பவன், இன்று திருப்பதி லட்டு விவகாரத்தில் செய்துவரும் அரசியலால், கட்சித் தொடங்கியபோது முன்னெடுத்த அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பவனாகக் காட்சியளிக்கிறார். பவன் கடந்து வந்த அரசியல் பாதையைக் கொஞ்சம் பின்னோக்கிப் பாரத்தால்…
ஒரு நடிகராக மக்களிடத்தில் தனக்கிருந்த பெயர், புகழ் அனைத்தையும் அரசியல் களத்துக்கு மாற்ற வேண்டும் என்கிற ஆசையில், 2008 ஆகஸ்ட் 2-ம் தேதி பிரஜ ராஜ்ஜியம் (மக்கள் ஆட்சி) என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார் சிரஞ்சீவி. ஒரு உச்ச நடிகர் அரசியல் கட்சி தொடங்கும்போது எப்படி ஆரவாரம் இருக்குமோ, அதுபோலவே இவருக்கும் நடந்தது. இவரின் தம்பி பவன் கல்யாண், பிரஜ ராஜ்ஜியம் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக அரசியலில் நுழைந்தார்.
சிரஞ்சீவி கட்சி தொடங்கிய நேரம், இவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக `நவ தெலங்கானா பிரஜ’ என்ற பெயரில் கட்சி தொடங்கிய துல்லா தேவேந்திர கவுட் தன்னையும், கட்சியையும் பிரஜ ராஜ்ஜியத்தில் இணைத்துவிட்டார். இவர், என்.டி.ஆர், அவருக்குப் பின் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும், தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய தலைவராகவும் இருந்தவர். குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் செல்வாக்குமிக்கவர். 2009-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 18 இடங்களில் வெற்றி பெற்றது பிரஜ ராஜ்ஜியம்.
இந்தத் தேர்தலில், சிரஞ்சீவி போட்டியிட்டு வெற்றிபெற்றாலும், போட்டியிடாமல் களத்தில் அண்ணனுக்கு ஆதரவாகப் பிரசாரம் மட்டும் மேற்கொண்டார் பவன். ஆனால், சிரஞ்சீவியை ஒரு மாற்று சக்தி என்று மக்கள் நம்புவதற்குள், 2011-ல் பிரஜ ராஜ்ஜியத்தைக் கொண்டுபோய் காங்கிரஸுடன் இணைத்தார் சிரஞ்சீவி. எந்தக் கட்சிக்கு எதிராக அரசியல் கட்சி தொடங்கப்பட்டதோ அதே கட்சியுடன் இணைவதா என அதிருப்தியடைந்த பவன் கல்யாண், இனி அரசியலில் தனியாகக் களமிறங்கலாம் என முடிவெடுத்தார். 2014 மார்ச் 14-ல் புதிய அரசியல் கட்சியையும் தொடங்கினார்.
ஜனசேனா, இதன் பொருள் மக்கள் படை. அண்ணனைப் போலவே தனது கட்சிப் பெயரிலும் மக்களுக்கான கட்சி என்பதை அடையாளப்படுத்தினார் பவன். `இடதுமில்லை, வலதும் இல்லை, மையம். மனிதம்தான் சித்தாந்தம்’ என்றார் பவன். `பலதரப்பட்ட சாதிகளை ஒன்றிணைக்கும் மனநிலை, மதப் பாகுபாடு இல்லாத அரசியல், மொழியின் பன்முகத்தன்மையை மதித்தல், கலாசாரம் மற்றும் பரம்பர்யத்தைப் பாதுகாத்தல், மாநில விருப்பங்களைப் புறக்கணிக்காத தேசியவாதம், ஊழலுக்கு எதிரானப் போராட்டம், சுற்றுசூழலைப் பாதுகாக்கும் வளர்ச்சி’. இந்த ஏழும்தான் ஜனசேனாவின் கொள்கைகள் என அறிவித்தார் பவன். குறிப்பாக, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பதை தனது இலக்காகவும் நிர்ணயித்தார்.
கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆந்திர சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் வந்தது. தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கைகோர்த்தார். ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தார். `காங்கிரஸை நீக்க வேண்டும், நாட்டைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற முழக்கத்தோடு பவன் முழுவீச்சில் இரு கட்சிகளுக்கும் வாக்கு சேகரித்தார்.
அந்தத் தேர்தலில், மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்தது, மாநிலத்தில் தெலுங்கு தேசம் ஆட்சியமைத்தது. ஆனால், மாநில சிறப்பு அந்தஸ்து, தொழிலாளர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் நலன் என குரல் கொடுத்துவந்த பவன், இவற்றை கண்டுகொள்ளாத தனது கூட்டணியிலிருந்து விலகினார். 2019 சட்டமன்றத் தேர்தலை, சி.பி.எம், பகுஜன் சமாஜுடன் ஆகிய இடதுசாரி சித்தாந்த அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக்கொண்டு எதிர்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கினார்.
போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த ஜனசேனா, ஒரேயொரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், தான் போட்டியிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தார் பவன். போட்டியிட்ட முதல் தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியிடம் இத்தகைய கடுமையான தோல்வியை எதிர்கொள்வோம் என்று அவர் எதிர்பார்க்கவுமில்லை. இருப்பினும், அடுத்த தேர்தலிலேயே வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்தார்.
பவனின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்திருக்கிறது 2024. முதல்முறையாகக் கட்சி ஆரம்பித்தபோது யாருக்கு ஆதரவளித்தாரோ அதே கட்சிகளுடன் கூட்டணியமைத்தார். தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.கவுடன் ஜன சேனாவும் கூட்டணியாக இணைந்திருந்தது. போட்டியிட்ட 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்று காட்டி, ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்தது பவன் கல்யாணின் ஜனசேனா.
ஆட்சியிலிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸால், ஜனசேனா அளவுக்கு கூட வெற்றிபெற முடியவில்லை. வெறும் 11 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வென்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் அதற்கு நேர்மாறாக 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாகவே ஆட்சியமைக்கும் பலம் பெற்றது. ஆனாலும், ஜனசேனா கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு கொடுத்தார் சந்திரபாபு நாயுடு. அதோடு நிற்காமல், பவன் கல்யாணை துணை முதல்வராகவும் நியமித்தார். இன்று ஆந்திர அரசியலில் தவிர்க்க முடியாதவராக பவன் உருவெடுத்திருக்கிறார்.
ஜெகன்மோகன் ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டுக்கொழுப்பு கலந்த நெய் கலக்கப்பட்டதாகச் சந்திரபாபு நாயுடு புள்ளி வைக்க, இன்று அதை சனாதன அரசியலாக்கி கோலம் போட்டுக்கொண்டிருக்கிறார் பவன். இந்த விவகாரம் வெடிக்க ஆரம்பித்தவுடனே, `இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும்’ என முதல் குண்டைப் போட்டார் பவன்.
அதோடு, `இந்து சனாதன தர்மத்தைப் பற்றிப் பேசுகையில் ஒன்றுக்கு, நூறு முறை யோசித்துப் பேசுங்கள்’ என்று இன்னும் தீவிரமாக இறங்கினார். தொடர்ந்து, `இந்து சனாதன தர்மத்தைக் காக்க வேண்டும்’ என்று ஆவேசமாகப் பேசத்தொடங்கிய பவன், திருப்பதி ஏழுமலையானுக்கு ஏற்பட்ட களங்கத்துக்குப் பிராயச்சித்தமாக 11 நாள் விரதம் மேற்கொண்டார். இந்த 11 நாளும், காவி உடை, மூச்சுக்கு மூச்சு இந்து தர்மம், சனாதன தர்மம் என பேசியது, வட மாநிலங்களில் பா.ஜ.க பேசும் அரசியலைப் போலவே பவனும் பேசுகிறாரே என்ற எண்ணத்தை மக்களிடத்தில் விதைத்திருக்கிறது.
தனது அரசியல் பயணத்தின் தொடக்க காலத்தில் 2017-ல், “சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் இறுதி மூச்சு வரை போராடிய எனக்குப் பிடித்த இரு போராளிகள் அம்பேத்கர், பெரியார்” என்று ட்வீட் செய்திருந்தார் பவன். இன்று இதே பவன், அந்த இருபெரும் தலைவர்களும் முற்றிலுமாக எதிர்த்த சனாதனத்தைக் காக்க வேண்டும் எனப் பேசிவருகிறார்.
பவனின் இத்தகைய மாற்றம், சமூக நீதிக்கான அரசியலிலிருந்து சனாதன அரசியலுக்குத் தனது பாதையை பவன் மாற்றிக்கொண்டாரா என கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது. குறிப்பாக, `சனாதனத்தை ஒழிப்போம் என்று பலர் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு கூறுகிறவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், சனாதனம் அப்படியே நிலைத்திருக்கும். அதை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துபோவார்கள்’ என பவன் பேசியிருப்பது, `டெங்கு, மலேரியாவைப் போல சானதானமும் ஒழிக்கப்படவேண்டியவை’ என உதயநிதி கூறியபோது, பா.ஜ.க தலைவர்கள் பேசிய அதே மிரட்டல் தொனியில் இருக்கிறது.
அன்று அரசியல் அதிகாரத்துக்கு வருவதற்கு முன் வெள்ளை உடையில், அனைத்து மக்களுக்குமானவர் என்ற பிம்பத்துடன் வலம் வந்த பவன், இன்று அதிகாரத்துக்கு வந்த சில மாதங்களிலேயே முழுவதுமாக காவி உடைக்கு மாறியிருக்கிறார். இது பவனின் திடீர் மாற்றமா அல்லது அவருடைய ஆழ்மனதில் ஏற்கெனவே ஆழமாக வேரூன்றியிருப்பதுதானா என்பதை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள்.
பவன் கல்யாணின் இந்த மாற்றம் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!