என்கவுன்ட்டர் அச்சம்; கால்கள் உடைந்த நிலையில் `அக்னி பிரதர்ஸ்’ – பல்லடத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரையாம்புதூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வினோத் கண்ணன் என்பவரை, காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் மறித்து ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது. இதில் தலை, கழுத்து மற்றும் கை பகுதிகளில் அதிக வெட்டு விழுந்து முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல்லடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அக்னி ராஜ். சட்டக் கல்லூரி மாணவரான அக்னிராஜ் கடந்த 2021-இல் மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அக்னி ராஜை அதே ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்க ‘அக்னி பிரதர்ஸ்’ என்ற இன்ஸ்டா பக்கத்தை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அக்னி ராஜின் கொலைக்கு காரணமான நபர்களாக கருதப்படுபவர்களை கொலை செய்து வருகின்றனராம்.

தங்கராஜ், ராஜேஷ்

பரமசிவன், அழகு பாண்டி, ஆகாஷ் ஆகியோரை அடுத்தடுத்து இந்தக் கும்பல் கொலை செய்து அவர்களுடைய தலையை சிதைத்தனர். இந்நிலையில்தான், அதே கும்பல் வினோத் கண்ணனையும் கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. வினோத் கண்ணன் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. வினோத் கண்ணன் கொலை செய்யப்பட்ட பிறகு ‘அக்னி பிரதர்ஸ்’ இன்ஸ்டா பக்கத்தில் ‘நான்கு முடிந்து விட்டது’ என பதிவிட்டதோடு கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணனின் புகைப்படத்தை வெளியிட்டு ‘மீண்டும் தொடரும்’ எனவும் பதிவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து திருப்பூர் மாவட்டக் காவல்துறை வினோத் கண்ணன் கொலையில் தொடர்புடைய அக்னி பிரதர்ஸ் குழுவைச் சேர்ந்த காளீஸ்வரன், பிரபுதேவா, சாமிநாதன், நிதிஷ் குமார், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த  தங்கராஜ், ராஜேஷ் என மொத்தம் 10 பேரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை சோமனூர் பகுதியில் செயல்படாத கல்குவாரி ஒன்றில் மறைத்து வைத்திருந்ததாக முக்கியக் குற்றவாளிகளான தங்கராஜ், ராஜேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கால் முறிவு

இதையடுத்து, அவர்களை சோமனூர் பகுதிக்கு அழைத்து வந்தபோதுதான் போலீஸார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தங்கராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஹாட்கோர் கிரிமினல்களான தங்கராஜ் மீது ஏற்கெனவே மூன்று கொலை வழக்குகள், நான்கு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 50 வழக்குகள் உள்ளது. ராஜேஷ் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன. வினோத் கண்ணன் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை சோமனூரில் உள்ள கல்குவாரியில் வைத்திருப்பதாக தெரிவித்ததால் அவர்களை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

கால் முறிவு

தங்களை போலீஸார் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் தப்பி ஓடி உள்ளனர். போலீஸார் துரத்தி பிடிக்கும்போது அவர்கள் கீழே விழுந்ததில் ராஜேஷின் இடது கால் மற்றும் தங்கராஜின் வலது கால் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் உள்ள இருவரிடமும் பல்லடம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா விசாரணை மேற்கொண்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது தங்கராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk