`நடிகை சமந்தா விவகாரத்தில் தொடர்புபடுத்துவது அரசியல்’ – அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பிய KT ராமராவ்!

பிரபல நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்வில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலுக்கும் கடந்த ஆகஸ்ட் 8, அன்று நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சமந்தா நாக சைதன்யா

இந்த நிலையில், தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா அளித்த ஒரு பேட்டியில், “சமந்தா மீது தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் விருப்பம் கொண்டார். அவரது ஆசைக்கு இணங்குமாறு நாகார்ஜுனாவின் குடும்பமே சமந்தாவை வற்புறுத்தியது. நாகர்ஜுனா குடும்பத்தின் செயல்களை ஏற்காத சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து விட்டார். இந்த ஜோடியின் பிரிவுக்கு, தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ்தான் காரணம்” எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் கொண்டா சுரேகாவின் பேட்டி வைரலான நிலையில், சமந்தா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகா கூறிய கருத்துக்கு எதிராக பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) செயல் தலைவர் கே.டி.ராமராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

K T ராமராவ் – கொண்டா சுரேகா

அந்த நோட்டீஸில்,“கொண்டா சுரேகா தனது இமேஜை கெடுக்கும் வகையில் நடிகையுடன் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறிய அந்தக் கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கே.டி. ராமராவ் தன் எக்ஸ் பக்கத்தில், “கொண்டா சுரேகா எனது பெயரை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார். தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார்” எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தெலங்கானா அரசியலில் பரபரப்பாகிவருகிறது.