சில மாதங்களுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் இரண்டு ராட் வீலர் நாய்களால் 5 வயது சிறுமி கொடுங்காயம் அடைந்ததை நம் யாராலும் மறந்திருக்க முடியாது. தற்போது அந்த சிறுமி எப்படி இருக்கிறாள் என்பதை தெரிந்துகொள்வதற்காக, சிறுமியின் தாயார் சோனியாவிடம் பேசினோம்.
”நாங்க இப்போ கேரளாவுல இருக்கோங்க. என் கணவரோட ஊர் விழுப்புரம். அங்க, பாப்பாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறது கஷ்டமா இருக்கு. அதான், கேரளாவுல இருக்கிற என் அம்மா வீட்டுக்கு வந்துட்டோம். என் வீட்டுக்காரர் இப்போ கொளுத்து வேலை செஞ்சிக்கிட்டிருக்கார்.
சென்னைக்கு வேலைபார்க்கத்தான் வந்தோம். அந்த பூங்காவை பராமரிக்கிற வேலை கிடைச்சிது. கூடவே, என் வீட்டுக்காரர் வாட்ச்மேன் வேலையும் பார்த்தார். ஒரு வருஷம் வேலைபார்த்தோம். பாப்பாவை கடிச்ச அந்த நாய்ங்களைப் பார்த்தாவே பயமா இருக்கும். அதுங்களோட வாயை மூடிகூட கூட்டிட்டு வர மாட்டாங்க. ‘குழந்தைங்க வர்ற பார்க்குல இவ்ளோ பெரிய நாய்களைக் கூட்டிட்டு வராதீங்க’ன்னு அதுங்களோட ஓனர்கிட்ட பல தடவை எச்சரிக்கை செஞ்சிருக்கேன். ஆனா, அவர் அதை கண்டுக்கவே இல்ல.
அங்க நாங்க வேலை பார்த்துட்டிருந்தப்போ, நான் ஒரு கோழி வளர்த்திட்டிருந்தேன். அது மரத்துல மேலதான் இருக்கும். ஒருநாள் எப்படியோ, இந்த நாய்ங்க கிட்ட மாட்டிக்கிச்சு. அத நார் நாரா பிய்ச்சிப் போட்டுடிச்சிங்க. காசு தரேன்னு சொன்னார் அந்த ஓனர். உயிரே போயிடுச்சி. உங்க காசும் வேணாம். ஒண்ணும் வேணாம்னு சொல்லிட்டேன். இன்னிக்கு கோழியை கடிச்சிருக்கு, நாளைக்கு மனுஷங்களைக் கடிச்சிட்டான்னு கேட்டதுக்கு ‘அதெல்லாம் நான் பார்த்துக்குவேன்’னு சொல்லிட்டார். கடைசியில, அதுங்க கிட்ட என் குழந்தையே மாட்டிப்பான்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலைங்க” என்கிறார் சோகமாக.
”சம்பவம் நடந்த அன்னிக்கு என் வீட்டுக்காரர் சென்னையில இல்ல. சொந்த ஊர் விழுப்புரத்துக்குப் போயிருந்தார். நான் வேலைபார்த்திட்டிருந்தேன். அதுங்க வாய்ல என் குழந்தை சிக்கிட்டா. அந்த நாய்களோட வாயை மூடிப்போட்டு கூட்டி வந்திருந்தாலோ, இல்ல அதுங்களை கட்டுப்படுத்துற அளவுக்கு ஓனர் ட்ரெய்னிங் கொடுத்து வளர்த்திருந்தாலோ, அன்னிக்கு என் குழந்தை அவ்ளோ பெரிய கொடுமையை அனுபவிச்சிருக்க மாட்டா. ஒண்ணு தலையைப் பிடிச்சி இழுத்துது; இன்னொண்ணு காலைப் பிடிச்சி இழுத்துது. சம்பவத்தைப் பார்த்த எல்லாருமே பயத்துல அப்படியே நின்னுட்டாங்க. அந்தளவுக்கு உயரமா, பலமா இருந்துச்சிங்க அந்த நாய்ங்க. பாப்பாவை காப்பாத்த நான் போராடின கேப்ல, சிலர் பாப்பாவை காப்பாத்தித் தூக்கிட்டுப் போயிட்டாங்க. என்னையும் கை, கால்ல கடிச்சிதுங்க” என்றவர், அழுதபடியே தொடர்ந்தார்.
”கை, கால், யூரின் போற இடம், அதோட பின்பக்கம்னு குழந்தையை அந்த நாய்ங்க கடிக்காத இடமில்லைங்க. அந்த இடங்கள்ல எல்லாம் தடம் தடமா இருக்கு. என் குழந்தை செத்துப் பிழைச்சிருக்கா. பாப்பா மனசுல இன்னமும் அந்த நாளோட பயமிருக்கு. ரோட்ல ஒரு நாய் போறதை பார்த்தாகூட, எனக்கும் பாப்பாவுக்கும் பயத்துல உடம்பு உதறுது.
எனக்கு ஒரேயொரு கோரிக்கைங்க. தலையில கடிச்சதால, பாப்பாவோட தலையில குழியா இருக்கு. அதுதான் ரொம்ப வேதனையா இருக்கு. நாளைபின்னே பாப்பாவுக்கு தலையில ஏதாவது பிரச்னை வந்தா, மொதல்ல ட்ரீட்மென்ட் கொடுத்த அதே ஹாஸ்பிடல்ல பார்த்துக்கிட்டா நல்லாயிருக்கும். அந்த நாய்ங்களோட சொந்தக்காரர் பாப்பாவோட படிப்பு செலவை பார்த்துப்பார்னு போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னாங்க. அத நம்பி நானும் பல தடவை அலைஞ்சிட்டேன். ‘அவங்க இன்னிக்கு வரலை, போன் பண்ணா எடுக்கலை’னு காரணமா சொல்லிட்டிருந்தாங்க. இவங்க வார்த்தைகளை நம்பி கேரளாவுக்கும் சென்னைக்கும் பாப்பாவைத் தூக்கிட்டு அலைய முடியலை. செலவும் செய்ய முடியலை. ‘கேஸை வாபஸ் வாங்கிட்டா இதெல்லாம் தருவாங்க’ன்னு சொன்னாங்க. நான் வாங்கலை. கோர்ட்ல பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். கடவுள் இருக்கார். அவர் பார்த்துப்பார்” என்கிறார் வேதனையாக.
கடந்த மார்ச் மாதம், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய 23 நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த நாய்களில் ராட் வீலரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY