Vck: `இதைச் செய்தால் மதுக்கடைகள் தானாக மூடிவிடும்..!’ – விசிக மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதி பேசியதென்ன?

கள்ளக்குறிச்சியில் வி.சி.க-வின் மகளிர் அமைப்பு சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, “வி.சி.க – தி.மு.க இடையே விரிசல்” என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

திருமாவளவன்

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “இந்த கூட்டத்தை பார்க்கும்போது திருமாவளவன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், கல்லூரியில் துடிப்பான இளைஞராக இருக்கும்போது மிகப்பெரிய சக்தியாக வருவார் என அன்றே சொன்னேன். அது இன்றைக்கு நிரூபணமாகியிருக்கிறது.

வி.சி.க மாநாட்டில் பேசுவதை என் வாழ்நாளில் பெற்ற மிகப்பெரும் பெருமையாக கருதுகிறேன். இந்த கூட்டத்தை பார்த்தால் சிலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். மாநாட்டை அறிவித்தவுடன் சில அரசியல் ஓநாய்கள், கொள்கை தெளிவில்லாவதவர்கள், கூட்டணி கூடுவிட்டு கூடு பாய்பவர்கள், இனி இந்தக் கூட்டணி நிலைக்காது, திருமாவளவன் கிளம்பிவிட்டார் என்றார்கள். ஆனால் செப்டம்பர் 28-ம் தேதி, தி.மு.க பவள விழாவில் 18 நிமிடங்கள் திருமாவளவன் பேசினார்.

திருமாவளவன் – ஆர்.எஸ் பாரதி

அதை பார்த்த கொள்கை பகைவர்கள், பர்னால் வாங்கும் அளவுக்கு வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு தி.மு.க சார்பில் இரண்டு ஆண்களை அனுப்பிவைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது தளபதிக்கும் திருமாவளவனுக்கும் இருக்கும் நெருக்கத்தை காட்டுகிறது. திருமாவளவனை பொறுத்தவரை ஒரு முடிவெடுத்தால் அதில் உறுதியாக இருப்பார் எனச் சொன்னார்கள். ஆம், அது உண்மைதான். மதுவிலக்கு குறித்து இந்த மேடையில் பலர் பேசினர். அதில் மாற்றுக் கருத்தில்லை.

மதுவிலக்கு பிரசாரத்தை செய்யவேண்டும் என்ற முடிவை திருமாவளவன் கையில் எடுத்துள்ளார். இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு சிறுத்தையும் திருமாவளவன் முன்னால், ஒருவர் 10 பேரை மது பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும். அப்படி செய்தால் மதுக்கடைகளை மூட வேண்டாம். கடைகளெல்லாம் தானாக மூடிவிடும்.” எனக் குறிப்பிட்டார்.