திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `கடவுளையாவது அரசியலை விட்டு தள்ளி வையுங்கள்’ என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
சர்ச்சையைக் கிளப்பிய சந்திரபாபு நாயுடு:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “கடந்த 5 ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஆட்சியில் திருமலையின் புனிதம் கெடுக்கப்பட்டிருக்கிறது. திருப்பதி கோவில் பிரசாதத்தின் தரத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது. புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி மாசு ஏற்படுத்திவிட்டனர். நாங்கள் வந்த பிறகு இப்போது தூய நெய்யைப் பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்” எனக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் ஆந்திர அரசியல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதியின் புனிதம் கெடுக்கப்பட்டுவிட்டதாக பல்வேறு ஆன்மிக அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பதறிய ஜெகன்மோகன் ரெட்டி:
இந்த குற்றச்சாட்டால் பதறிப்போன ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி அவசர அவசரமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “திருப்பதி லட்டு விவகாரத்தில், முற்றிலும் அரசியல் நோக்கங்களுக்காக ஆளும் தெலுங்கு தேசக் கட்சி கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்துகிறது. தற்போது ஆட்சியமைத்திருக்கும் தெலுங்கு தேசம் அரசின் மீதான மக்களின் அதிருப்தியை திசைதிருப்பவும், அரசின் தோல்விகளை மறைக்கவும் திருப்பதி தேவஸ்தானத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் சந்திரபாபு நாயுடு. திருப்பதி கோயிலுக்கு வரும் ஒவ்வொரு நெய் டேங்கரும், (NABL) தேசிய அங்கீகாரம், சோதனை, அளவுத்திருத்த ஆய்வகங்களின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகளிடமிருந்து சான்றிதழ் பெற்றப் பின்னரே பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு டேங்கரிலிருந்தும் மூன்று மாதிரிகள் பெறப்பட்டு, அதை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மூன்று மாதிரிகளும், சோதனையில் தேர்ச்சி பெற்ற பின்னரே, நெய் பயன்படுத்த அனுமதிக்கப்படும். ஒரு நெய் மாதிரி தேர்ச்சிப்பெறவில்லை என்றாலும் கூட தரமற்றதாக கருதி அந்த டேங்கர் நிராகரிக்கப்படும். இப்படி பலமுறை நெய் டேங்கர்கள் நிராகரிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. எனவே, பிரசாதம் தயாரிப்பதில் தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற அச்சத்துக்கு கொஞ்சமும் அவசியமில்லை.
கலப்படம் செய்யப்பட்ட நெய் டேங்கர் ஜூலை 12-ம் தேதி திருப்பதிக்கு வந்தது உண்மைதான். ஆனால், திருப்பதி தேவஸ்தானம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் வலுவான சோதனைகள் மூலம், அதன் தரத்தை சோதனையிட்டு, அந்த கலப்பட நெய் நிராகரிக்கப்பட்டது. அதை பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படவில்லை. இதையெல்லாம் தெரிந்தே சந்திரபாபு நாயுடு பொய்ப் பிரசாரம் செய்கிறார்.
மத உணர்வுகளை முற்றிலும் புறக்கணித்து, பொய்களைப் பரப்பும் தவறான நோக்கத்துடன், ஜூலை 12-ம் தேதி நடந்த சம்பவத்தை, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 18 அன்று அரசியல் கட்சி கூட்டத்தில் பேசி திட்டமிட்டு பெரிதாக்குகிறார். சந்திரபாபு நாயுடு பிறவிப் பொய்யர். அரசியல் நோக்கங்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை கடுமையாக புண்படுத்தும் வகையில் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் செயல்கள் உண்மையில் ஒரு முதலமைச்சரின் அந்தஸ்தை மட்டுமல்ல, அனைவரின் அந்தஸ்தையும் குறைத்துவிட்டது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மை, சந்திரபாபு நாயுடுவின் வெட்கக்கேடான பொய்களால் நிலைகுலைந்திருக்கிறது. இப்போது முழு நாடும் பிரதமரான உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொய்களைப் பரப்பும் வெட்கமற்ற செயலுக்காக சந்திரபாபு நாயுடு கடுமையான முறையில் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அதன்மூலம் கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மனதில் உள்ள சந்தேகங்களை போக்கி, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
சந்திரபாபுவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்:
இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி., பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆன்மிக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் (30-9-2024) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “திருப்பதி லட்டுவில் கலப்படம் தொடர்பான ஆய்வு முடிகள் ஜூலை மாதம் உங்களுக்கு கிடைத்த நிலையில், அதை செப்டம்பர் மாதம் வெளியிடக் காரணம் என்ன? சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணையின் முடிவுகள் வெளிவரும் முன்பே ஆந்திர முதல்வர் ஊடகங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? கடவுளையாவது அரசியலிலிருந்து தள்ளி வையுங்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்!” என்றனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, முதலமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய ஒரு அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவது சரியானது அல்ல. நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கையில் உறுதியாக கூறப்படவில்லை. சோயாபீன், பாமாயில் அல்லது தேங்காய் எண்ணெய் கூட கலக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வக அறிக்கை கூறுகிறது. அதற்கு, லட்டு பிரசாத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் கிடையாது. எனவே, ஆந்திரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமா? அல்லது சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா? என்று மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர் நீதிபதிகள்!