`ராமச்சந்திரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்!’ – வலியுறுத்தும் படுகர் சமுதாய சங்கங்கள்

தமிழகத்தின் அரசு தலைமை கொறடாவாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள இளித்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், கருணாநிதி ஆட்சியின்போது கதர்வாரியத்துறை அமைச்சராக தேர்வானதன் மூலம் படுகர் சமுதாயத்தில் முதன்முதலாக அமைச்சராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைப் பெற்றார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்த தொகுதியான குன்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமச்சந்திரனுக்கு முதவ்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை வழங்கப்பட்டது. அடுத்து நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின்போது சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது ஏற்பட்டிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். தங்கள் சமுதாயத்தில் முதன் முதலாக அமைச்சரான ராமச்சந்திரனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கு படுகர் சமுதாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராமச்சந்திரன்

படுகர் சமுதாய மக்களின் அமைப்புகளில் ஒன்றான இளம் படுகர் சங்க நிர்வாகிகள் சிலர் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ள படுகர் சமுதாய மக்கள் இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். பசுந்தேயிலைக்கான உரிய விலை முதல் பழங்குடி அந்தஸ்து வரை பல்வேறு கோரிக்கைகளும் தேவைகளும் எங்கள் மக்களுக்கு இருக்கிறது. ராமச்சந்திரனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது எங்கள் மக்களுக்கான முக்கியத்தை இழந்ததாக கருதுகிறோம். எனவே, மீண்டும் அவருக்கு பதவி வழங்க வேண்டும். படுகர் சமுதாய மக்களை‌ ஒன்றுதிரட்டி அதற்கான கூட்டத்தை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் ” என்றனர்.