`மிஸ் யூ மிசிமா’- அமெரிக்கா டு ஆம்பூர்; 56 ஆண்டுகள் எளியவர்களுக்கு சேவை; மருத்துவர் ஆலிஸ் மறைந்தார்

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பகுதி மக்களின் போற்றுதலுக்குரிய மருத்துவர் ஆலிஸ் ஜி பிராயர் வயதுமூப்புக் காரணமாக காலமானார். கடந்த 56 ஆண்டுகாலமாக எளிய மக்களுக்கான மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வந்தவர் ஆலிஸ். இவரது வாழ்விலிருந்து சில துளிகள்…

1938-ம் ஆண்டு பிறந்தார் ஆலிஸ் ஜி பிராயர். தந்தை ரிச்சர்ட் ஹென்றி பிராயர், தாய் ஏர்னா மிடில்டா ஆகிய இருவருமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இருவரும் நாகர்கோவில் வந்து தங்கியிருந்தபோது, 1938-ம் ஆண்டு பிறந்தார் ஆலிஸ். தனது 6 வயது வரை நாகர்கோவிலில்தான் வளர்கிறார். பிறகு கொடைக்கானல் பள்ளியில் நான்காம் வகுப்பு வரைப் பயில்கிறார்.

ஆலிஸ் ஜி பிராயர்

1948-ம் ஆண்டு, அதாவது தனது 10 வயதில் குடும்பத்தோடு தாய் நாட்டுக்குச் செல்கிறார் ஆலிஸ். அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்று, மருத்துவ உயர் கல்வியையும் முடித்தார். 1968-ம் ஆண்டு மருத்துவராகி, இந்தியாவுக்கே திரும்புகிறார் ஆலிஸ். குறிப்பாக, தான் பிறந்த தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் இருந்த அலாதிப் பிரியம்தான் மீண்டும் அவர் இங்கு வருவதற்கான காரணம். `வாழ்நாள் வரை தமிழ்நாடுதான் தனது வீடு’ என உணர்வால் உறுதி எடுத்துக்கொண்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்தார்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பகுதியில் குடியேறினார். கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டு, சத்துக் குறைபாடு மற்றும் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், தாய்ப்பாலின் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சத்து மாவையும் தயாரித்து தாய்சேய்க்குக் கொடுத்துவந்தார். இதனால், ஆலிஸிக்கு மக்கள் வைத்தப் பெயர் `மிசிமாவு’. காலப்போக்கில் இந்தப் பெயர் மறுவி `மிசிமா’ என்று அழைக்கப்பட்டு வந்தார்.

ஆலிஸ் ஜி பிராயர்

அதைத்தொடர்ந்து, 1990-களில் இருந்து சிறப்பான முறையில் கருத்தரிப்பு சிகிச்சைகளையும் அளிக்கத் தொடங்கினார் ஆலிஸ். மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையில் எளியக் குடும்பத்தினர் சிலருக்குப் பணஉதவி செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான், மருத்துவர் ஆலிஸ் வயது மூப்புக் காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 86. பொதுமக்களின் அஞ்சலிக்காக ஆலிஸின் உடல் வைக்கப்பட்டு, நாளை மறுநாள் (அக்டோபர் 3-ம் தேதி) அவர் வாழ்ந்துவந்த `லேடீஸ் பங்களா’ வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அரைநூற்றாண்டுக்கு மேலாக எளிய மக்களுக்கான மருத்துவ சேவையில் ஈடுபட்டுவந்த அன்னை ஆலிஸின் மறைவு ஆம்பூர் மக்களை துயரத்தில் மூழ்கடித்திருக்கிறது. போய் வாருங்கள் மிசிமா!