மனோ தங்கராஜ்: `அரசுக்கு எதிராகவே திரைமறைவில் இயக்கம்?’ – பதவி பறிப்புக்கு காரணமானதா?

மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிபோக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கடைசியாக அவர் அரசுக்கு எதிராக போராட `இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சியினரை இணைத்து தனி இயக்கம் ஒன்றை ஆரம்பித்ததும், அந்த இயக்கம் மூலம் கனிமவள கடத்தலை தடுக்காததை கண்டித்து போராட்டம் அறிவித்ததும்தான் காரணம் என்கிறார்கள் மாவட்ட உடன்பிறப்புகள் சிலர்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அதில் மனோ தங்கராஜ் தரப்புக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் மனோ தங்கராஜ் கருங்கல் பகுதியில் உள்ள தனது வீட்டில் செப்டம்பர் 24-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சியனரை அழைத்து அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், தி.மு.க சார்பில் மனோ தங்கராஜின் மகன் ரெமோன், வி.சி.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

மனோதங்ஜராஜ் ஏற்பாட்டில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம்

அந்த கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்க ‘கனிமவள கடத்தல் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த இயக்கம் சார்பில் கனிமவள லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து அக்டோபர் 5-ம் தேதி குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும், தக்கலையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் மனோ தங்கராஜின் மகன் ரெமோன் தலைமை வகிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க விபரப்புள்ளிகள், “நெல்லையில் இருந்து குமரி எல்லையைத் தாண்டிச் செல்லும் லாரிகள் அனைத்தும் மனோ தங்கராஜ் தரப்பின் ஆசியுடனே சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தனர். இந்த நிலையில் முறையான நடைச்சீட்டு பெற்றுச் செல்லும் லாரிகள் மனோ தங்கராஜ் தரப்பை திடீரென `கவனிக்காமல்’ சென்றதாகவும் அந்த லாரி உரிமையாளர்களின் பின்னணியில் நெல்லையைச் சேர்ந்த அதிகார மைய்ய தலைவர் ஒருவர் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் கோபமான மனோ தங்கராஜ் தரப்பு, கனிமவளக் கடத்தலை தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டது என்ற வகையில் அரசுக்கு எதிராக போராட போராட்டக்குழுவை ஏற்படுத்தியதாம். இதன் மூலம் அந்த லாரி உரிமையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என திட்டமிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மனோ தங்கராஜ்

அன்று நடந்த கூட்டத்தை முழுமையாக ஒருங்கிணைத்தது மனோ தங்கராஜ் தான் என்கிறார்கள். எனினும், அவர் எங்கும் சீனில் வரவில்லை. போட்டோவுக்கு போஸ்கொடுக்கவும் இல்லை. ஆனால் அவரின் மகனை அந்த குழுவில் இடம்பெறச்செய்தார். ஒரு போராட்டத்துக்கு மகன் தலைமை தாங்குவார் என அறிவிக்கவும் வைத்திருக்கிறார். அரசுக்கு எதிராக போராட ரகசியமாக குழு அமைத்த மனோ தங்கராஜின் செயல்பாடு தலைமை கவனத்துக்குச் சென்றுள்ளது. அரசுக்கு எதிராக போராடவே ஒரு அமைப்பை ஏற்படுத்திய மனோ தங்கராஜ் மீது கோபமான தலைமை, அவரின் அமைச்சர் பதவியை பறித்துள்ளது. ஏற்கனவே ஆவின் விவகாரம், நாகர்கோயில் மேயருடன் மோதல் என தொடர்ந்து புகார் சென்ற நிலையில் இந்த விவகாரம் தலைமைக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb