ஏ.ஜி.நூரானி 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த அறிவார்ந்த ஆளுமைகளுள் ஒருவர். வழக்கறிஞரான இவர் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேல், இந்திய தேசம் கண்ட அரசியல் சமூக நீதித்துறைச் சார்ந்த பிரச்னைகளைத் தனது புலமையின் வழி ஆராய்ந்து கட்டுரைகளையும் புத்தகங்களையும் படைத்து ஆவணங்களாக விட்டுச் சென்றிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது 93 வயதில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். இறக்கும் வரைக்குமே தொடர்ச்சியாக சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் எழுதிக்கொண்டேதான் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக தனது எழுத்தின் வழி தீவிரமாகச் செயல்பட்டார்.
ஏ.ஜி.நூரானியின் நினைவுகளைப் பகிரும் வகையில், ‘அரசியல் சாசனத்தை பாதுகாக்க முன்னின்றவர்ஏ.ஜி.நூரானி’ என்ற தலைப்பில் அவருடன் நெருங்கி பழகியிருந்த Front line இதழின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர் சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் பேசியிருந்தார்.ஏ.ஜி.நூரானியின் பணிகளை உள்ளும் புறமுமாக விரிவாக விளக்கும் வகையிலான அந்த சுவாரஸ்ய உரை முழுமையாக இங்கே.
`அரசியலமைப்புச் சட்டமே அடிப்படை’
‘நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமகாலத்தை இருண்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜெர்மனை சேர்ந்த மார்க்சிய நாடக ஆசிரியர் ப்ரெஸ்ட் எழுதிய சில வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ‘இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? பாடுதல் இருக்குமா? ஆம், இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்கும். ஆனால், அவை இருண்ட காலங்களை பற்றிய பாடல்களாக இருக்கும். ஏ.ஜி.நூரானி இருண்ட காலத்தை பற்றி மட்டும் பேசியிருக்கவில்லை. தத்துவம், சமூகம், அரசியல் என எல்லாவற்றிலும் எதிர்காலத்துக்கும் தேவையான ஒளியை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘Tale of Two Cities’ நாவலில் தொடக்கமே, ‘It is the best of times, it is the worst of times. It is the age of wisdom. It is the age of foolishness.’ அதாவது,
‘இதுதான் காலங்களில் சிறந்தது, இதுதான் காலங்களில் மோசமானது. இதுதான் ஞானத்தின் காலம், இதுதான் முட்டாள்த்தனத்தின் காலம்.’ என்றுதான் இருக்கும். இருள் அதிகமாகும்போதுதான் நமக்கு வெளிச்சம் அதிகமாக தேவைப்படும். முட்டாள்த்தனம் அதிகமாகும் போதுதான் நமக்கு ஞானம் அதிகமாக தேவைப்படும். அந்தவகையில் இருள் சூழ்ந்த காலக்கட்டங்களில் நமக்கு வெளிச்சத்தை கொடுக்க வந்தவர்தான் ஏ.ஜி.நூரானி. 93 வயதிலும் அவர் அரசியலைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் எழுதிக் கொண்டேதான் இருந்தார். சக்கர நாற்காலியில் உட்காந்துகொண்டே பல புத்தகங்களை எழுதி முடித்திருக்கிறார்.
கடைசியாக அவரை சந்திக்கையில் கூட பாபர் மசூதி தீர்ப்பு குறித்து ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தார். எழுதி முடிப்பதற்குள் தவறிவிட்டார். அவருடன் 20 ஆண்டுகள் இணைந்து பயணித்திருக்கிறேன். ‘Frontline’ இதழுக்காக அவரிடம் பல கட்டுரைகளை வாங்கியிருக்கிறேன்.
அயராத எழுத்துப் பணி
2002 லிருந்து Front line இதழில் அசோசியேட் எடிட்டராக இருந்தேன். 2011-லிலிருந்து எடிட்டராக 2022 வரை இருந்தேன். இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு மாத ஓய்வை தவிர மற்ற எல்லா மாதங்களிலும் Frontline இதழ் பணியை முடித்திருக்கிறேன். அந்த அத்தனை இதழ்களிலும் ஏ.ஜி.நூரானி கட்டுரை எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 500 புத்தகங்களில் 500 கட்டுரைகள் என எடுத்துக் கொள்ளலாம். இப்போதிருக்கும் தொழில்நுட்ப வசதியெல்லாம் இல்லாத காலக்கட்டம் அது. வெறும் கையாலும் டைப் ரைட்டரையும் வைத்துக் கொண்டு மட்டுமே அத்தனை கட்டுரைகளை எழுதி குவித்திருக்கிறார். அவை சாதாரண கட்டுரைகளும் அல்ல. எல்லாமே தீவிரமான வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். அடுத்த மூன்று இதழ்களுக்கு என்ன தலைப்பில் கட்டுரை கொடுக்கப்போகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்.
எவ்வளவு எழுதினாலும் என்ன எழுதினாலும் அரசியலமைப்புச் சட்டம் என்பதுதான் அவரது எழுத்தின் அடிப்படையாக இருக்கும். அதிகார மையத்திற்கு எதிராகத்தான் அவருடைய எழுத்துகள் அத்தனையும் இருந்திருக்கும். ஆனாலும் யாரும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததில்லை. காரணம், அவர் எழுதும் எல்லாவற்றிற்கும் அவரிடம் ஆதாரம் இருக்கும். அவரது வீட்டில் நேரு, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரின் செய்தித்தாள்களில் வெளி வந்த உரைகளை வெட்டி வைத்திருப்பார். 1950 களிலிருந்து வெளியான செய்தித்தாள்களின் முக்கிய செய்திகளையெல்லாம் அவர் வெட்டி வீட்டிலேயே சேகரித்து வைத்திருப்பார். அவர் எழுதிய ஒரு கட்டுரையை பார்த்துவிட்டு ஒருமுறை உளவுத்துறையினர் அவர் வீடு தேடியே வந்துவிட்டனர். சட்டப்படி இதெல்லாம் ரகசியமாக இருக்க வேண்டிய தகவல்கள் அதெல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்புகிறார்கள். இவர் அலட்டிக் கொள்ளாமல் பழைய செய்தித்தாள் ஒன்றை எடுத்துக் காட்டி இது எப்போதோ வெளியாகிவிட்டது எனக் காட்டியிருக்கிறார். இப்படிப்பட்டவரை அதிகார மையத்தால் என்ன செய்ய முடியும்?
2000-3000 வார்த்தைக்குதான் ஒரு கட்டுரையை எழுதுவார். அதைப் படித்தால் நீங்கள் வேறெந்த கட்டுரையையும் படிக்க வேண்டாம். உங்களுக்கு முழு வெளிச்சத்தையும் தரும் வகையில் அந்த கட்டுரை இருக்கும். கட்டுரையில் சில சமயங்களில் எதாவது வார்த்தைகள் ரொம்பவே கடுமையாக இருக்கும். உடனே அலுவலகத்திலிருந்து வார்த்தையை மாற்ற வேண்டும் என அவருக்கு தொலைபேசியில் அழைப்போம். கேட்டவுடனேயே வேறு வார்த்தையை மாற்றிக் கொடுப்பார். அந்த வார்த்தையும் முன்னதைப் போன்ற சக்தியோடும் பொருளோடும் இருக்கும். அதுவும் வேண்டாமெனில் அவர் இன்னொரு வார்த்தையையும் கொடுக்க தயாராக இருப்பார். அந்தளவுக்கு அவரிடம் மொழி ஆளுமை மிளிரும்.
தனிப்பட்ட முறையில் அன்பாளர்
தீவிரமான எழுத்துக்களால் அறியபட்டாலும் நேரில் பழகுவதற்கு இனிமையானவர், நல்ல நகைச்சுவை சுபாவம் கொண்டவர். சென்னை வந்திருந்த போது என்னை முதல் முதலாக சந்திக்கையிலேயே, ‘சென்னையில் சாப்பிடுவதற்கு ஒரு நல்ல ஹோட்டலை பரிந்துரை செய்யுங்கள்.’ என்றார். நான் ‘காரைக்குடி மெஸ்’ ஐ பரிந்துரைத்தேன். அடுத்த முறை நான் அவரை தொலைப்பேசியில் அழைத்த போது, ‘நீங்கதானே எனக்கு அந்த ஹோட்டலை பரிந்துரை செஞ்சீங்க. ரொம்ப நல்லா இருந்துச்சு. 1000 ரூபாய்க்கு பார்சலே வாங்கிட்டு வந்தேன்.’ என மகிழ்ச்சியோடு கூறினார். உணவின் மீது அவருக்கு அவ்வளவு நாட்டம். மும்பை வரும்போது எனக்கு மும்பையின் சிறந்த உணவுகளை அறிமுகப்படுத்துவதாக சொல்லிக் கொண்டே இருப்பார். ஒருமுறை அவர் விமானத்தில் பயணிக்கும்போது உணவு வழங்குவதற்காக Veg or Non – Veg என கேட்டிருக்கிறார்கள். அதற்கு ‘Anti Veg’ என பதில் கூறியிருக்கிறார். இப்படியான நகைச்சுவை நையாண்டிகளும் அவரிடம் அடிக்கடி வெளிப்படும்.
முகத்தில் அறையும் கட்டுரைகள்
அவரின் சில கட்டுரைகளையும் புத்தகங்களையும் கட்டுரைகளையும் இங்கே மேற்கோள்காட்ட விரும்புகிறேன். 1990 ஏப்ரல் மாதத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தலைப்பே அவ்வளவு கடுமையாக இருக்கும். ‘Taming the RAW’ ரா அமைப்பை அடக்குதல் என்பதுதான் கட்டுரையின் தலைப்பு. நாம் மற்ற நாடுகளை பற்றி பேசுகிறோம். ஆனால், நம்முடைய ரா அமைப்பு இலங்கை, பாகிஸ்தான் போன்ற மற்ற நாடுகளில் என்ன செய்கிறது என்று கடுமையாக விமர்சித்திருப்பார். அவர் அப்படித்தான். எந்த நிறுவனத்துக்கும் அதிகார மையத்துக்கும் பயப்படவே மாட்டார். அதேமாதிரி, 2022 இல் ‘Judges and their Bogus Collegium’ – நீதிபதிகளும் அவர்களின் போலியான கொலிஜியமும் என்பதுதான் கட்டுரையின் தலைப்பு. இந்த கட்டுரையை எழுதிய போது அவருக்கு 92 வயது. நீதிபதிகளை பற்றியெல்லாம் அவ்வளவு எளிதில் விமர்சிக்க முடியாது. ஆனால், ஏ.ஜி.நூரானி அந்தக் கட்டுரையில் கொலிஜியம் முறையை அடித்து நொறுக்கியிருப்பார். காஷ்மீரை பற்றியுமே நூரானி நிறைய எழுதியிருக்கிறார். நேருவின் காலத்தில் ஷேக் அப்துல்லாவை சிறையில் அடைத்துவிட்டார்கள். விக்ரம் சாராபாய் என்கிற விஞ்ஞானியின் பரிந்துரைப்படி நூரானி ஷேக் அப்துல்லாவுக்காக ஆஜராகிறார். அப்போதிருந்தே காஷ்மீர் பிரச்னையின் மீது அவர் அதிக கவனம் செலுத்தினார்.
காஷ்மீர் மக்களின் உரிமைப் போராளி
காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட சமயத்தில் அவரிடம் ஒரு கட்டுரை வாங்கினேன். அதன் தலைப்பு ‘Murder Of Insaniyat’ – மனிதத்தின் படுகொலை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி 370 வது பிரிவின் நீக்கம் செல்லாது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயல் இது. ஏற்கனவே 370 வது பிரிவு அந்த மக்களுக்கு கொடுத்த உரிமைகளை எந்த அரசாங்கமாக இருந்தாலும் மெல்ல மெல்ல சிதைத்துக் கொண்டுதான் இருந்தனர். வெறும் கூடு மட்டும்தான் மிஞ்சியிருந்தது. இப்போது அதையும் உடைத்து விட்டார்கள். 370 என்பது அரசியல் நிர்ணயசபையால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு மட்டுமல்ல. அது இந்திய அரசுக்கும் காஷ்மீர் அரசுக்கு இடையிலான ஒப்பந்தத்தினால் உண்டானது. 1954 லிலிருந்து அதை சிதைத்து வந்தவர்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது என அப்படியே அப்பட்டமாக உள்ளதை உள்ளவாறு எழுதியிருந்தார்.
பாபர் மசூதி – உச்ச நீதிமன்றம் நீதியை மறுக்கிறது!
அதேமாதிரி, பாபர் மசூதி தீர்ப்பு வெளியான சமயத்தில் கவர் ஸ்டோரியாக ஒரு கட்டுரை வேண்டும் என அவரிடம் கேட்டிருந்தேன். புத்தகத்தை முடிக்க நான்கைந்து நாட்கள்தான் நேரம் இருந்தது. அதையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அவர் முதலில் தீர்ப்பு நகலை அனுப்பி வைக்க சொன்னார். 1000 பக்கங்களுக்கும் அதிகமாக இருக்கும் தீர்ப்பு அது. நாங்களும் அனுப்பி வைத்தோம். ஐந்தாவது நாள் எங்களுக்கு கட்டுரை வந்து சேர்ந்துவிட்டது. ‘Supreme Court Denies Justice – உச்சநீதிமன்றம் நீதியை மறுக்கிறது.’ என்பதுதான் கட்டுரையின் தலைப்பு. ஒரு மதச்சார்பற்ற நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு எந்தவொரு சமய சமூக அமைப்பின் வழிபாட்டுத்தலத்தையும் கட்ட சொல்லும் அளவுக்கு என்ன உரிமை என்ன அதிகாரம் இருக்கிறது? இது சொத்துரிமை தொடர்பான வழக்குதான். ஆனால், உச்ச நீதிமன்றம் அதையும் கடந்து சென்று மதக்கலவரம் உண்டாகும் ஒரு பிரதேசத்துக்குள் நுழைகிறது. இப்படி இறங்கியதன் மூலம் அது தனது தொழிலுக்கே ஒரு களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. தீர்ப்பு வெளியான ஒரு வாரத்துக்குள் இப்படி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.
பாபர் மசூதி தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. அந்த அமர்வில் இருந்த ரஞ்சன் கோகாய் பின்னாளில் ராஜ்ய சபா உறுப்பினரானார். எஸ்.ஏ.பாப்டே பின் நாட்களில் தலைமை நீதிபதி ஆகினார். கொலிஜியம் மூலம் நீதிபதி நியமனத்துக்காக அரசிடம் பரிந்துரைக்காத நல்ல நீதிபதி. டி.ஒய்.சந்திரசூட் இப்போது தலைமை நீதிபதி. அசோக் பூஷண் National Company Law Tribunal இன் தலைவரானார். அப்துல் நசீர் ஓய்வுக்குப் பிறகு ஆந்திராவின் கவர்னாகினார். இதையெல்லாம் தீர்ப்போடு நீங்கள் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நாம் சில உண்மைகளை அடுக்குகிறோம் அவ்வளவுதான்.
நூரானிஅந்தக் கட்டுரையில் முக்கியமான இடத்தில் இப்படி எழுதியிருப்பார். அதாவது,
“வரும் ஆண்டுகளில் ஒரு நாளில் உணர்ச்சிகள் அத்தனையும் வடிந்த பிறகு 1949, 1992 ஆகிய ஆண்டுகளில் நடந்த சம்பவங்களோடு 2019 இல் வழங்கப்பட்ட தீர்ப்பையும் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். 1976 இல் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்போடும் மக்கள் இதை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
1976 இல் ஒரு முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்திரா காந்தி எமெர்ஜென்சியை அமல்படுத்தியிருந்த காலக்கட்டம் அது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு மிசா சட்டத்தில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். அதை எதிர்த்து நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்திராவின் இந்த நடவடிக்கை சரிதான் என தீர்ப்பு வழங்கியது. அதிர்ச்சிகரமான தீர்ப்பு அது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் பிரஸ் க்ள்ப்பிற்கு வருகிறார். அங்கே பத்திரிகையாளர்கள் ‘அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இப்படி ஒரு தீர்ப்பை ஏன் வழங்கினீர்கள்? என கேட்க அதற்கு அந்த நீதிபதி, ‘நாங்களெல்லாம் கோழைகளாக இருந்தோம்.’ என இந்திராவின் ஆட்சியில் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார். அந்த நீதிபதியின் பெயர் ஒய்.வீ.சந்திரசூட்.” இப்படித்தான் அந்த பாபர் மசூதி தீர்ப்பு கட்டுரையை நூரானிமுடித்திருப்பார்.
ஒய்.வீ.சந்திரசூட் யார் என்பதை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு மேல் அவராலும் சொல்ல முடியாது. எங்களாலும் பிரசுரிக்க முடியாது. ஆனால், அவர் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டார். இந்த சாதுர்யம்தான் நூரானியின் அழகு.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்துத்துவம், சாவர்க்கர் போன்றவற்றை பற்றியெல்லாம் நிறைய எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல் என புத்தகமே வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் இருக்கும் அந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்க்கும் போது 800 பக்கங்கள் வந்தது. தமிழில் மொழிபெயர்க்கும் எங்களால் எதையும் விடவே முடியவில்லை. ஆங்கிலத்தில் 100 பக்கங்களுக்கு பின் இணைப்பு மட்டுமே கொடுத்திருப்பார். ஆர்.எஸ்.எஸ் இன் சட்டத்திருத்தங்கள், கோல்வாக்கருக்கும் வல்லபாய் படேலுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகள் என எல்லா ஆவணங்களை பற்றிய குறிப்புகளையும் இணைத்திருப்பார். ஒரு முறை ஆர்.எஸ்.எஸ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. சாகா மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களை நாக்பூருக்கு கொண்டு செல்கிறீர்கள். அதற்கு வரிகட்ட வேண்டும் என்கிறார்கள். அப்போது வருமான வரித்துறையிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வரிவிலக்கு நடைமுறைகளுக்காக நாங்கள் ஒரு கலாச்சார அமைப்பு என்கிறார்கள். உடனே பம்பாய் அறநிலைய கமிஷனர் ஆர்.எஸ்.எஸ் யை கலாச்சார அமைப்பாக பதிவு செய்யுங்கள் என்கிறார். அங்கே நாங்கள் கலாச்சார அமைப்பு அல்ல. அரசியல் அமைப்புதான் என ஆர்.எஸ்.எஸ் சார்பில் விளக்கம் கொடுக்கிறார்கள். அப்படி கேட்டால் இப்படி இப்படி கேட்டால் அப்படி என ஆர்.எஸ்.எஸ் மாறி மாறி பேசியதை நூரனி ஆவணங்களுடன் புத்தகத்தில் அம்பலப்படுத்தியிருப்பார்.
ஆர்.எஸ்.எஸ் இன் மன்னிப்பு கேட்கும் வரலாறு சாவர்க்கரோடு முடிந்துவிடவில்லை. இந்திரா காந்தி எமெர்ஜென்சியை அறிவித்த போது அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தியாரஸ், பி.எஸ்.பிடே போன்றோரும் சிறையில் வைக்கப்பட்டனர். சிறையிலிருந்த இவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதி தங்களை விடுவித்தால் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் மூலம் அரசின் 20 அம்ச திட்டங்களை செயல்படுத்த உதவுகிறோம் என இந்திராவுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அவர்களின் மன்னிப்பு வரலாறு காலங்காலமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
1964 இல் பிரதமராக இருந்த நேரு அதிகாரிகள் சிலருடன் பேசிக் கொண்டிருக்கையில், ‘இந்தியாவில் கம்யூனிசம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.’ என ஒரு செய்தியை நேருவிடம் அதிகாரிகள் கூறுகிறார்கள். அதற்கு நேரு, ‘இந்தியாவுக்கு ஆபத்து கம்யூனிசத்தால் அல்ல. கம்யூனலிசத்தால்தான்!’ அதாவது வலதுசாரி இந்துத்துவ அடிப்படை வாதத்தால்தான் என கூறுகிறார். நேருவின் வார்த்தைகளுக்குப் பிறகு அந்த கம்யூனலிச விஷம் வேகமாக பரவியது. ஆனால், அது ஒன்று தோற்கடிக்க முடியாத விஷயமில்லை. அதை எதிர்த்துப் போராட ஒரு சித்தாந்தத் தளம் வேண்டும். அப்படியில்லையெனில் இந்தியாவின் கனவும் ஆன்மாவும் சிதைந்துவிடும். இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல் புத்தகத்தின் முன்னுரையை நூரானி எழுதியிருந்தார்.
‘The Kashmir Dispute’ என்பதும் அவரின் மிக முக்கியமான புத்தகம். மொத்தம் 300 பக்கங்களை கொண்ட அந்த புத்தகத்தின் முதல் பாகத்தில் 150 பக்கங்களுக்கு ஆவணங்களை மட்டுமே இணைத்திருப்பார். ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெல்லாம் அவரின் புத்தகங்கள் வரப்பிரசாதமாக இருக்கும்.
அரசியலமைப்பு சட்ட பிரச்னைகளும் குடிமக்களின் உரிமைகளும் என்றொரு புத்தகமும் எழுதியிருக்கிறார். குடியரசுத் தலைவர், நீதித்துறை, மாநிலங்கள், சிவில் சர்வீஸ் என பல தலைப்புகளில் அந்த புத்தகத்தில் கட்டுரைகள் நீளும். மாநிலங்கள் என்ற பகுதியில் ஒரு ஆளுநரின் அதிகாரம் என்னவென்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியிருப்பார். குடியரசுத்தலைவர் ஆட்சி, சபாநாயகரின் அதிகாரங்கள், ஆட்சிக்கலைப்பு, கல்வித்துறை, வெளியுறவுக் கொள்கைக்கும் மாநிலத்துக்குமான எல்லை என மாநில நிர்வாகத்துக்கு தேவையான அனைத்தும் அந்த மாநிலங்கள் என்கிற அத்தியாயத்துக்குள் இருக்கும்.
அடிப்படைவாதத்தை அதன் எதிர் சித்தாத்தங்களை பற்றி போராட வேண்டும்!
‘Calling a spade a spade’ ‘Speaking truth to Power’ என இரண்டு பதங்களை ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்த பதங்களுக்கு உண்மையாகத்தான் நூரானிவாழ்ந்தார். குடியரசுத் தலைவர், பிரதமர், இராணுவத் தளபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி என யாரையும் அவர் விமர்சிக்க தவறியதில்லை. பதிலுக்கு யாரும் அவர் மீது அவதூறு வழக்கு தொடரவும் இல்லை. அப்படி வழக்கு தொடர்ந்திருந்தால் அவர்களுக்குதான் பிரச்சனையாகவும் அமைந்திருக்கும். ஏனெனில், நூரானியின் கையில் எல்லாவற்றுக்கும் ஆதாரமும் இருந்தது.
இருண்ட காலமென்றாலும் நம்பிக்கை இழக்கக்கூடாது!
இது இருண்ட காலம்தான் என்றாலும் நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்பதுதான் நூரானியின் வாழ்வு நமக்கு சொல்லும் செய்தி. வெறுமென தேர்தலில் வெற்றிப் பெறுவது மட்டுமே வெற்றியல்ல. அதிகார மட்டத்தில் அமைப்புக்குள் கருத்தியல்ரீதியாக ஊடுருவியிருக்கும் களைகளையும் அகற்ற வேண்டும். அதற்கு சித்தாந்தரீதியாகத்தான் போராட வேண்டும்.
வரலாறுக்கும் அறிவியலுக்கும் எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளை மறுதலித்து புத்தகங்கள் எழுத வேண்டும். வெறுமென இடதுசாரி மண், திராவிட மண் என பேசிக்கொண்டிராமல் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதை மக்களிடம் கொண்டும் சேர்க்க வேண்டும். அப்படியொரு அரும்பணியைத்தான் நூரானி90 வயதைக் கடந்த பிறகும் செய்துகொண்டிருந்தார்.” என உரையை முடித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb