Bulldozer: 47 வீடுகளை இடித்த அஸ்ஸாம் பாஜக அரசு; நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

பா.ஜ.க., ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில், ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள், கடைகள் என்று கூறியும், குற்றவாளிகளின் வீடுகள் என்று கூறியும், அந்தந்த மாநில அரசுகளே புல்டோசரை கொண்டு அவற்றை இடிக்கும் செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் `புல்டோசர் பாபா’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். மறுபக்கம், இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கையில் பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலான வீடுகள், கடைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை.

புல்டோசர்

இதனால், பா.ஜ.க., வேண்டுமென்றே சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறிருக்க, புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான பொதுநல வழக்கைச் சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராக இருந்தாலே எப்படி அவரது வீட்டை இடிக்க முடியும். குற்றவாளியாகவே இருந்தாலும் கூட சட்டத்தைப் பின்பற்றாமல் அவரது வீட்டை இடிக்க முடியாது” என்று கண்டித்ததோடு, “கட்டுமானங்களை இடிப்பது தொடர்பாக முழு நாட்டுக்குமான ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்படும்” என்று தெரிவித்தது.

மேலும், பொதுச் சாலைகள், நடைபாதைகள், ரயில் பாதைகள் அல்லது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகளில் நீதிமன்ற முன் அனுமதியின்றி இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனச் செப்டம்பர் 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறிருக்க, அஸ்ஸாமில் கம்ரூப் மாவட்டத்திலுள்ள கச்சுடோலி பத்தர் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 47 வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாஜக – அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

இதில் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கும் பாதிக்கப்பட்டவர்கள், “அந்த இடத்தின் உரிமையாளர்களின் ஒப்பந்தத்தின் கீழ் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வந்த போதிலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகள் எங்களின் வீடுகளை இடித்திருக்கின்றனர். இத்தனைக்கும், எங்களின் மனுக்கள் முடிக்கப்படும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அஸ்ஸாம் அட்வகேட் ஜெனரல் செப்டம்பர் 20-ம் தேதி கவுகாத்தி உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்” என்று தங்கள் மனுவில் நினைவூட்டியிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம்

மேலும், “குடியிருப்பாளர்களிடம் முறையாகத் தெரிவிக்காமல் இடிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள். இது அரசியலமைப்பின் 14, 15, 21-வது பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக மாநில பா.ஜ.க., அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதோடு, 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் மாநில அரசிற்கு உத்தரவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY