தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் பகுதியில், நேற்று இரவு 17 வயது சிறுமி ஒருவர் சாலையோரத்தில் அழுதபடி நின்றுள்ளார். இதைப்பார்த்த சிலர் அதிராம்பட்டினம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் சிறுமியை பாதுகாப்பாக போலீஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதிராம்பட்டினம் போலீஸார், பெண் விவகாரம் என்பதால் இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அப்பெண்ணை பட்டுக்கோட்டைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணை ஏமாற்றி இருவர் கூட்டு பாலியல் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் சிலரிடம் பேசினோம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. அவரது தந்தை மன்னார்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கியுள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் சாத்தனூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் (28) அவரிடம் கடனுக்கான நிலுவைத் தொகையை வசூலித்து வந்துள்ளார். அத்துடன் கடன் வசூலிப்பது தொடர்பாக சிறுமியோட தந்தையின் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். அந்த சமயத்தில் முத்துபாண்டி சிறுமியிடம் பேசுவது வழக்கம், இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முத்துபாண்டியன் சிறுமியின் தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது, அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என சிறுமி கூறியிருக்கிறார். எங்க கம்பெனிக்கு நேரில் வந்து சொல்லிவிட்டுச் செல்லுமாறு முத்துப்பாண்டியன் சிறுமியை அழைத்துள்ளார். அவரது தந்தையும் பணத்தை கட்டி விடுவதாக போய் சொல்லிட்டு வாம்மானு கூறியுள்ளார். சிறுமியும் பழகிய நபர் தானே அழைக்கிறார்னு நம்பி சென்றுள்ளார்.
மன்னார்குடிக்கு வந்த சிறுமியை முத்துப்பாண்டியன் தனியாக அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அப்போது அவரது நண்பர் தவசீலன்(25) உடன் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியை ஏமாற்றி தவசீலனுடன் சேர்ந்து டூவீலரில் ராஜாமடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ராஜாமடம் அக்னி ஆறு பகுதிக்கு சென்ற பிறகு முத்துப்பாண்டியனும், தவசீலனும் சேர்ந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது இதை வெளியே சொல்லாமல் இருக்க மிரட்டுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.
விசாரணையில் சிறுமி நடந்த இந்த சம்பவத்தை போலீஸில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துபாண்டியன், தவசீலன் இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை தொடந்து வருவதாக தெரிவித்தனர்.