விஜய் ஆரம்பித்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் கொடி கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
மேழும் கீழும் சிவப்பு, நடுவில் மஞ்சள் என அமைந்த மூன்று வர்ணக் கொடியின் நடுவே வாகைப் பூ, அதைச் சுற்றிலும் நட்சத்திரங்கள் மற்றும் அதன் இருபக்கங்களிலும் யானை இருக்கும்டியாக அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இதேபோல யானை சின்னம் பல கொடிகளில் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.
அந்த சமயத்தில் தேசியக் கட்சியான ‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் கொடியிலும், சின்னத்திலும் யானை இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. ஒரே மாதிரியான சின்னங்களை கட்சிகள் வைத்திருந்தால், அது தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் கூறியிருந்தனர்.
‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது’ என்றும், ‘உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும்’ என்றும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்திருந்தது.
தற்போது இதற்குப் பதிலளித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தற்காலிக சின்னம் (Free symbol list) கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்புதான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தைப் பெற முடியும். எந்தவொரு கட்சியின் கொடிக்கும் நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது” என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.