சென்னையில் அசோக் நகரில், மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட கால்வாயில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, உயிரிழந்த நபர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் தி.மு.க., அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஐயப்பனின் மரணத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும், ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். அதில், “சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல், முறையாகத் தடுப்புகள் வைக்கப்படாத நிலையிலிருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ., மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என அவல நிலையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் தி.மு.க., அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்துக்குக் காரணம்.
இம்மரணத்துக்குத் தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாகக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் விடியா தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.