திமுக பவள விழா: மோதல் வராதா, புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில்… – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“1949 இல் ராபின்சன் பூங்காவில் அண்ணா தன் தம்பிமார்களுடன் திமுகவை தொடங்கிய போது வான்மழை வாழ்த்தாக பொழிந்தது. இப்போது வையகமே வாழ்த்தும் வகையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்” – என்று ஸ்டாலின் பவள விழாவில் உரையாற்றி இருக்கிறார்.

தி.மு.க.வின் 75-ம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.

திமுக பவள விழா

கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தனர். இதனைத்தொடர்ந்து உரையாற்றிய தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின், ” 1949 இல் ராபின்சன் பூங்காவில் அண்ணா தன் தம்பிமார்களுடன் திமுகவை தொடங்கிய போது வான்மழை வாழ்த்தாக பொழிந்தது. இப்போது வையகமே வாழ்த்தும் வகையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். திமுக அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி. இந்த கூட்டணி தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. நம்முடைய கூட்டணியை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமை. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துகிறேன் என்கிறார்கள்.

இந்தியா முழுவதும் 4000 க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது காஷ்மீரில் 90 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலையே மூன்று கட்டத்துக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இந்தியா முழுவதும் எப்படி ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த முடியும்?. இது மாநில அரசுகளின் பதவிக்காலத்தை குறைக்கும். மாநிலங்களில் குழப்பத்தை உண்டாக்கும். தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியைப் பார்த்துதான் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை அமைத்தார்கள்.

திமுக பவள விழா

மக்களவையில் பெரும்பான்மையில்லாத பாஜக அரசு ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். திமுகவின் வெற்றியில் தோழமைக் கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது. 75 ஆண்டுகளைகட கொண்டாடும் திமுக நூற்றாண்டை எட்டுவதற்குள் மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும். அதற்கு தோழமை கட்சிகளும் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். திமுக செய்த சாதனைகளுக்கு உறுதுணையாக தோழமை கட்சிகளும் நின்றிருக்கிறது. கூட்டணிக்குள் மோதல் வராதா புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில் பொய்களை பரப்பி அற்பத்தனமான வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது.” என்று பேசியிருக்கிறார்.