MK Stalin: “ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள்; 31 லட்சம் வேலைவாய்ப்புகள்” – பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

ன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல… உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் `முதல் முகவரி’. டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியில் அவர் இருப்பது, தமிழ்நாட்டுக்கே பெருமை. வேளாண் குடும்பத்தில் பிறந்து பெருமைமிகு அரசுப் பள்ளியில் படித்து, இந்த அளவுக்கு உயர அவருடைய தன்னம்பிக்கையும், அறிவாற்றலும்தான் காரணம். இந்திய இளைஞர்களுக்கெல்லாம் சந்திரசேகரன் முன்மாதிரியாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

எனது கனவுத் திட்டமான `நான் முதல்வன்’ திட்டத்தோடு இணைந்து டாடா நிறுவனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால், நம் மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது. இவை மென்மேலும் வளர்ச்சி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தொழிற்சாலையின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான நாளாக, இந்த நாள் விளங்குகிறது. ரூ.9,000 கோடி முதலீடு செய்ததோடு, ஐந்தாயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கவிருக்கிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து, நிறுவன திறப்பு விழாவுக்கும் டாக்டர் சந்திரசேகரன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நான் அடிக்கடி குறிப்பிடுவது, அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழில் தொடங்குவது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த 1973-ம் ஆண்டு, கலைஞர் அவர்கள் இதே ராணிப்பேட்டையில்தான் `முதல் சிப்காட்’ தொடங்கினார். 50 ஆண்டுகளைக் கடந்தும் இங்கே பல்வேறு நிறுவனங்களைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடுதான் வாகன உற்பத்தியின் தலைநகரம். மின்சார வாகனங்களின் தலைநகரமும் தமிழ்நாடுதான்.

இந்தியாவில் விற்பனைச் செய்யப்படுகிற மின்வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் நாட்டிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன். நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டிலும் `தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது.

நினைவுப் பரிவு வழங்கிய டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன்

நேற்றுகூட ஆங்கில நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழ்நாடு வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டுள்ள ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து இன்று உயர்ந்துகொண்டிருக்கிறது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுக் காட்டிருந்தேன்.

தொழில் துறைக்கு நான் கொடுத்திருக்கிற இலக்கு, 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியா முழுவதுமாக முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் சிறந்த மாநிலமாக மேம்படுத்த வேண்டும். அந்த பயணத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசு, பொறுப்பேற்றதிலிருந்து ரூ.10 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

MK Stalin

உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். அதை விரைவில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதற்குச் சான்றுதான் இந்த விழா. டாட்டா மோட்டார்ஸின் இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் போடப்பட்டது. 6 மாதத்துக்குள்ளாக இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்வுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு அனைத்தையும் செய்யும். அதற்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும்.” என்றார்.