பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பெங்களூரு போலீஸ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
நிர்மலா சீதாராமன், ஜெ.பி நட்டா, பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் 8,000 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்றுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம், ஆதர்ஷ் ஐயர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஆதர்ஷ் ஐயர் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர்.
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பயமுறுத்தி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிக்கப்பட்டதாக அவரளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இன்று இவர்கள் மீது பெங்களூரு திலகர் நகர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நிர்மலா சீதாராமன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.