திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்துள்ளார். கரூர், கோவை மாவட்ட உடன்பிறப்புகள் சென்னை புழல் சிறையில் அவரை வரவேற்று, போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது போஸ்டரில் கூட அவரின் புகைப்படத்தை வைக்காத நிர்வாகிகள் கூட,
‘அண்ணன் வரார் வழி விடு..’, ‘ உசுரே நீ தானே’ பாடல்களுடன் ஸ்டேடஸ் வைத்து வருகின்றனர். சிறைக்குள் இருந்தபோதே கோவை, கரூர் அரசியலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் செந்தில் பாலாஜி.
அப்படியிருக்கும்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளவர் தன் செல்வாக்கை நிரூபிக்க என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் அரசியல் கிராஃபில் ஏராளமான ஏற்ற இறக்கங்கள் வந்து சென்றுள்ளன.
சிறைக்கு செல்வதற்கு முன்பு திமுக சீனியர் அமைச்சர்களே அவரின் செல்வாக்கை நினைத்து உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர். எனவே அவரின் அடுத்த இன்னிங்ஸில் முன்பை விட இன்னும் அதிவேகமாக பயணிப்பார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் பேசினோம், “செந்தில் பாலாஜி மிகவும் தளர்ந்து போயுள்ளார். அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிட உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து வந்து அவரை சந்தித்த யாரிடமும் சரியாக பேசவில்லை. சீனியர் அமைச்சர்களிடம் கூட அவர்கள் கேட்பதற்கு மட்டுமே பதிலளிக்கிறார். அவரை சந்திக்க வரும் சீனியர்களிடம் மட்டும் சம்பிரதாயத்துக்காக லேசாக சிரிக்கிறார். பெரும்பாலான நேரம் சிரிப்பு எட்டி பார்ப்பதில்லை.
அவரின் மனதில் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. நிச்சயமாக கடந்த காலத்தில் சிக்கியது போல சர்ச்சைகளில் சிக்க விரும்ப மாட்டார். அதனால் மதுவிலக்கு துறை வேண்டாம் என்றே சொல்லவும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் பழைய செல்வாக்கு வேண்டுமென்றால், அதைவிட பவர்புல்லான ஒரு துறையை அவர் குறிவைத்திருப்பார்.
ஏற்கெனவே செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியானற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு, ஐடி விங் ஹேஷ்டேக் உருவாக்கியது என்று இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டாம் என்று பல சீனியர்கள் குமுறுகிறார்களாம்.
இதனால் அவருக்கு ஒதுக்கப்பட உள்ள துறை குறித்து தலைமை எப்படி முடிவு செய்யும் என்று தெரியவில்லை. அரசுத்துறைகளில் மாற்றம் ஏற்பட்டாலும், அரசியல் ரீதியாக பெரிய மாற்றங்கள் இருக்க போவதில்லை. கரூர், கோவையில் மீண்டும் ஆக்டிவாக பணியாற்றுவார். சிறைக்கு செல்வதற்கு முன்பே செந்தில் பாலாஜி, ‘கொங்கு மண்டல தளபதி’ என்ற முழக்கத்தை அவர் தரப்பில் கிளப்பி விட்டிருந்தனர். அதற்காக இந்த முறை முழு வீச்சில் பணியாற்றுவார்.
ஏற்கெனவே அவர் திமுகவில் சத்தமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கியுள்ளார். அந்த வகையில் திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அவருக்கான ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வார்.
கொங்கு மண்டலத்தில் யார் பெரியவர் என அதிமுக எடப்பாடி பழனிசாமி, திமுக செந்தில் பாலாஜி, பாஜக அண்ணாமலை இடையே ஒரு பனிப்போர் உள்ளது. எனவே அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு அரசியலில் செந்தில் பாலாஜி எப்படி செயல்பட போகிறார் என்பதை வைத்தும் அவரின் எதிர்காலம் இருக்கும். ‘என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.’ என்று மு.க. ஸ்டாலின் குறித்து செந்தில் பாலாஜி உருக்கமாக கூறியுள்ளார்.
இருப்பினும் அவரின் அரசியல் எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதேபோல கடந்த காலங்களில் ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் குறித்து அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
‘என் உயிர் உள்ளவரை சசிகலா அணியில் தான் இருப்பேன்.’ என்று செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதேபோல தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். காலம் மாறியது. காட்சியும் மாறியது. இருப்பினும் தற்போதைக்கு செந்தில் பாலாஜியின் அரசியலுக்கு திமுக கட்சி அவசியம்.
அதேபோல அவரின் கொங்கு மண்டல களப்பணி திமுகவுக்கும் தேவை. அதனால் செந்தில் பாலாஜி களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றுவார். இருப்பினும் அவர் விசயத்தில் தலைமை கவனமாக இருக்கும் என்றே தெரிகிறது. தற்போதைய நிபந்தனைகளின் படி அவர் வாரத்துக்கு இரண்டு நாள்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். மாதத்தில் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அமைச்சராக அவர் வாராவாரம் கையெழுத்திட செல்வதை தலைமை விரும்பாது. அதனால் சட்ட ரீதியாக நிபந்தனைகளில் தளர்வு பெறுவது குறித்த நடவடிக்கைகள் தொடங்கப்படலாம். நிபந்தனைகளில் தளர்வு கிட்டினால் அமைரவைக்குள் செந்தில் பாலாஜி வலம் வருவதை தடுக்க முடியாது. அதுவரை கட்சி பணிகளில் தீவிரம் காட்டுவார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88