பாப்பம்மாள்: பத்மஶ்ரீ விருது பெற்ற கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். வயது 110. அவரின் இயற்பெயர் ரங்கம்மாள்.  சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்தவர். அவரின் பாட்டிதான் வளர்த்துள்ளார். தொடக்கத்தில் மளிகை கடை, ஹோட்டல் கடை நடத்தி வந்தார்.

பாப்பம்மாள் பாட்டி

இயற்கை விவசாயி. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விவாதக்குழு உறுப்பினராக இருந்தார். திமுகவின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். கட்சி தொடர்பான நிகழ்வுகளில் ஆக்டிவாக கலந்து கொண்டார்.

பாப்பம்மாவுக்கு 20 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் குழந்தைகள் இல்லை. 100 வயதை கடந்தும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் பாப்பம்மாவுக்கு பெரியார் விருது அறிவித்திருந்தது.

பாப்பம்மாளுடன் மு.க ஸ்டாலின்
பாப்பம்மாளுடன் நரேந்திர மோடி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது, பாப்பம்மாள் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றிருந்தனர்.

வயது முதிர்ந்தாலும் பாப்பாம்மாள் சில மாதங்களுக்கு முன்பு வரை ஆரோக்கியமாகவே இருந்தார். வாழை இலையில்தான் சாப்பிடுவார். ஒரு இட்லி, ஒரு தோசை என்று அளவாக சாப்பிடும் அவர், டீ, காபி குடிக்க மாட்டார். அவ்வபோது கொத்துமல்லி காபி மட்டும் குடிப்பார். நீளமான கூந்தல், ஒரிஜினல் பற்களுடன் ஆரோக்கியமாகவே இருந்தார்.

பாப்பம்மாள் பாட்டி

 இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, பாப்பம்மாள் பாட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.