இளம் கோடீஸ்வரர்கள் பட்டியல்: மும்பையை முந்திய பெங்களூரு; பட்டியலில் இருக்கும் பிரபலங்கள் யார், யார்?

இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரமாகக் கருதப்படும் பெங்களூருவில் தற்போது ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களும் அதிக அளவில் வரத் தொடங்கிவிட்டன. இது போன்ற நிறுவனங்களை இளைஞர்கள் தொடங்கிச் சாதித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் தற்போது இந்தியாவில் 35 வயதுக்கு உட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறது. அப்பட்டியலில் இந்தியாவில் 150 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பெங்களூரு 29 இளம் கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

இஷா அம்பானி

இவர்களுக்கு 100 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியனுக்கும் அதிகமாகச் சொத்து இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை கோடீஸ்வரர்கள் ஆவர். அவர்களில் தேர்டு வேவ் காபி (Third Wave Coffee) உரிமையாளர்கள் சுஷாந்த் கோயல், ஆயுஷ் பத்வால், ரேஸர்பே உரிமையாளர் சஷாங்க் குமார், மீஷோ (Meesho) உரிமையாளர்கள் விதித் அத்ரே, சஞ்ஜீவ் பன்ர்வால் ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் மும்பை இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மும்பையில் இளம் கோடீஸ்வரர்கள் 26 பேர் இருக்கின்றனர். நாட்டின் பொருளாதார தலைநகரமாகக் கருதப்படும் மும்பையில் இளம் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷேர்சாட் உரிமையாளர் அங்குஷ் சச்சிதேவ் மிகவும் இளம் கோடீஸ்வரராக அறியப்பட்டுள்ளார். இவருக்கு 31 வயதுதான் ஆகிறது.

பரிதா பாரிக் மற்றும் இஷா அம்பானி ஆகியோர் 32 வயது கோடீஸ்வரர்களாக இருக்கிறது. இப்பட்டியலில் 7 பெண் கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். நிதித்துறையைச் சேர்ந்த 21 பேரும், சாப்ட்வேர் சார்ந்த துறையை சேர்ந்த 14 பேரும் இடம் பெற்றுள்ளனர். இதில் இஷா அம்பானி, பரிதா பாரிக் ஆகியோர் தங்களது தந்தை மூலம் கோடீஸ்வரர்களானவர்கள் ஆவர். சிலர் ஐ.ஐ.டி.,யில் படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் சொந்தமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தைத் தொடங்கி கோடீஸ்வரர்களாகி இருக்கின்றனர்.

சுஷாந்த் கோயல், ஆயுஷ், சஞ்ஜீவ்

இளம் கோடீஸ்வரர்களில் 13 பேர் சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர்கள் ஆவர். மும்பை ஐ.ஐ.டி.,யில் 11 பேர் படித்துள்ளனர். இப்பட்டியலை ஹூருன் நிறுவனர் அனாஸ் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் 35 வயது வரையிலான கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது.