தேனி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா, வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதில் விவசாயிகள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளித்து பேசினர்.
அப்போது பேசிய பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்,
“ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தமிழக நீர்வளத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
கேரள வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆனவச்சால் கார் பார்க்கிங் பகுதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கம் என்பதை தமிழக அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய நீர்வள ஆணையம் சார்பில் முல்லைப்பெரியாறு அணையில் 12 மாதங்கள் தொடர்ந்து நடத்த உள்ள ஆய்வை ரத்து செய்து, பேபி அணையை பலப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
அதோடு தமிழகம் – கேரளாவை இணைக்கும் தேவாரம் – சாக்குளத்து மெட்டு மலைச் சாலை அமைக்க வனத்துறையின் ஒப்புதல் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் முன் வைத்தனர்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர் ஷஜீவனா, விவசாயிகள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறினார்.