‘இவ்வளவு சீக்கிரம் முதல்வருக்கு நியாபக மறதி வரும்னு நினைக்கல’ – செந்தில் பாலாஜி விவகாரத்தில் வானதி

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, அ.தி.மு.க அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக்கொண்டு வேலை அளித்தார் என்பதுதான் அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

வானதி சீனிவாசன்

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கின்றன  என்பதை, முன்பு தற்போதைய முதலமைச்சரே பேசி இருக்கிறார். இதை செந்தில் பாலாஜி கட்சி மாறியிருப்பதால் அவர் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

செந்தில் பாலாஜி, ஸ்டாலின்

முதலமைச்சருக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் நியாபக மறதி வரும் என எதிர்பார்க்கவில்லை. முதமைச்சரே கரூர் சென்று  இன்றைக்கு அவர் தியாகச் சுடராக பார்க்கின்ற செந்தில் பாலாஜி குறித்து பேசியதை நியாபகப்படுத்த விரும்புகிறேன்.

இந்த மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல. செந்தில் பாலாஜி அரசின் முழு ஆதரவைப் பெற்ற, பவர்ஃபுல் அமைச்சராக இருந்தார். சிறைக்குள் இருந்தாலும், கோவை மாநகராட்சியில் யார் மேயராக வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார். மீண்டும் அதே போன்ற ஒரு முக்கியத்துவமோ, அதே  செல்வாக்கு இருந்தால் அது சாட்சிகளை பாதிக்கும். மாநில முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊழலுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என முதல்வர் சொல்வதை செயலில் காட்ட வேண்டும்.” என்றார்.