`தமிழிசை சவுண்டு; ஹெச்.ராஜா ரவுண்டு’ – எப்படி இருக்கிறது அண்ணாமலை இல்லாத பாஜக?

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காகச் சென்றிருக்கிறார். இதையடுத்து தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். முன்னதாக வெளிநாட்டிலிருந்தாலும் அண்ணாமலையே கட்சியை வழிநடத்துவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென குழு அமைக்கப்பட்டது.

அண்ணாமலை

ஒருங்கிணைப்பு தலைவர் ராஜா மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க அலுவலக செயலாளர் எம்.சந்திரன், “தமிழக பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, “தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வின் அமைப்பு ரீதியான 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, அவரது சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் தொடங்கியது. 27-ம் தேதி வரையில் சென்னையில் ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அக.17-ம் தேதி கோவை மற்றும் நீலகிரியில் பயணத்தை நிறைவு செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான பேட்டிகளைக் கொடுத்து வருகிறார். அந்தவகையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியவர், “சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி அமைச்சர்கள் வரை உதயநிதி எப்போது துணை முதல்வர் ஆவார் என்பதிலேயே கவனம் முழுவதும் செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினோ உதயநிதியைத் துணை முதல்வராகும் கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிரப் பழுக்கவில்லை எனக் கூறிவிட்டு அதைப் பழுக்க வைக்கும் முயற்சியிலேயே முழு மூச்சாகச் செயல்பட்டு வருகிறார். தி.மு.க-வை வைத்துக் கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது கோடாரிகள் ஒன்று சேர்ந்து மரம் வெட்டக் கூடாது என மாநாடு நடத்துவது போன்று உள்ளது. மதுவை ஒழிக்க திருமாவளவன் மாநாட்டை நடத்துவதாகத் தெரியவில்லை. 2026 தேர்தலில் தி.மு.க-விடம் இருந்து அதிக தொகுதிகளைப் பெறுவதற்காகவே இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார்” என்றார்.

தமிழிசை செளந்தரராஜன்

முன்னதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், “அமைச்சர் உதயநிதி குறித்து வதந்தி வெளியானது. நல்ல நாள் இல்லை என்பதால் பகுத்தறிவுவாதிகளாகிய அவர்கள் இப்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா அது. தி.மு.க-வின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின்போது உதயநிதியின் மகன் தலைமை என தி.மு.க-வில் தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைக் கொண்டு கருணாநிதி குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்தார். இவ்வாறு தொடர்ச்சியாக அதிரடியான பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்.

இதையடுத்து அண்ணாமலை இல்லாத பா.ஜ.க எப்படி இருக்கிறது என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் பேசினோம், “ஹெச்.ராஜா, தமிழிசையின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது அண்ணாமலையின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. பா.ஜ.க தற்போது தேர்தல் மனநிலையில் இருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்குப் பெரிய வேலைகள் எதுவும் நடக்காது. இந்த சூழலில் மாநில அளவிலான சுற்றுப்பயணம் தேவையில்லை. உறுப்பினர் சேர்க்கைக்கு என ஒரு இலக்கை டெல்லி கொடுத்திருக்கிறது. அதை நிறைவேற்ற நிர்வாகிகள் முயற்சிப்பார்கள். பிறகு கீழ்மட்ட தேர்தல்கள் நடத்தப்படும். இறுதியாக தேசியத் தலைவரைத் தேர்வு செய்வார்கள்.

ஹெச்.ராஜா

இதன் மூலம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் அல்லது பதவிக் காலம் நீட்டிக்கப்படும் வரையில் அண்ணாமலைதான் தலைவர். ஹெச். ராஜா-வுக்காவது ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி உள்ளது. தமிழிசைக்கு அதுவும் கிடையாது. ஆனால் அவர் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதன் மூலமாகக் களத்திலிருந்து அண்ணாமலையை பின்னுக்குத் தள்ளி வருகிறார்.

தராசு ஷியாம், ப்ரியன்

இதேபோன்ற நடவடிக்கைதான் மாநிலம் முழுவதும் ஹெச்.ராஜா சுற்றுப்பயணம் செல்வதும். மறுபக்கம் பதிலுக்கு வீடியோ வெளியிட்டு தனது ஆதரவாளர்களை அண்ணாமலையும் உற்சாகப்படுத்தி வருகிறார். இதன் மூலம் தலைவர் பதவியைப் பிடிக்க மூன்று முனை போட்டி நடக்கிறது.

தமிழக பா.ஜ.க-வை பொறுத்தவரையில் அண்ணாமலை ஆதரவு கோஷ்டி, எதிர்ப்பு கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றன. மேலிடத்தின் ஆதரவு அண்ணாமலைக்கு இருக்கிறது. சர்வதேச அரசியலைப் படிப்பதால் தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இருந்தாலும் அவர் செல்கிறார். தலைமை விரும்பியிருந்தால் வேறு தலைவரை நியமித்து இருக்கலாம் அல்லது ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். இதன் மூலமாக டெல்லியும் கோஷ்டி பூசலுக்குத் துணைபோகிறது. இந்த கோஷ்டி பூசல் இறுதியாக அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டுமா?, வேண்டாமா? என்பதில்தான் முடியும். அண்ணாமலைக்குப் பதவி நீட்டிப்பு கொடுத்தால் கூட்டணி வேண்டாம் என்பார். பா.ஜ.க தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அதற்கு 35% வாக்குகள் வேண்டும். அது அவர்களிடம் இல்லை. எனவே என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.