செந்தில் பாலாஜிக்கு பிணை: “அவரைப்போல சட்டப்போராட்டம் நடத்துபவர்களை பார்க்க முடியாது!” – ரகுபதி

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது மகிழ்ச்சியான ஒன்று. கடந்த 15 மாதங்களாக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வந்துள்ளார். அவரைப்போல பொறுமையோடு சட்டப் போராட்டம் நடத்தியவரை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சிறையில் இருந்து கொண்டு, ‘அமைச்சர் பதவி கூட வேண்டாம்’ என்று சொல்லி மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இன்று நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. நிச்சயமாக அவர் வழக்குகளில் வெற்றி பெறுவதற்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளது.

அமைச்சர் ரகுபதி

ஆனால், அவர்கள் எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்கள், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள் என்று பார்த்தால் மிக மிக குறைவாகத்தான் இருக்கும். வழக்குகள் போடுவது என்பதை ஒரு பாலிஸியாக அமலாக்கத் துறையினர் வைத்துள்ளனரே தவிர, இறுதி தீர்ப்புக்கு அவர்கள் செல்வது கிடையாது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவைப் பொறுத்து உள்ளது. அதை பற்றி கருத்து கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்.