அமைச்சரவை, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் குறித்த பேச்சும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்ற பேச்சும் கன்னித்தீவு கதையைப் போல முடிவேயில்லாமல் நீண்டுகொண்டிருக்கின்றன. முதலில் இது குறித்து முன்னதாக ஒருமுறை பேசிய முதல்வர் ஸ்டாலின், “கோரிக்கை வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை” என்றார்.
இதனிடையே அமெரிக்கா சென்றபோது, “மாறுதல் ஒன்றுதான் மாறாதது. வெயிட் அண்ட் சி (Wait and see)” எனப் பதிலளித்தார். சமீபத்தில் இது குறித்துக் கேட்டபோது, “மாற்றம் இருக்கும்… ஏமாற்றம் இருக்காது” என்றார். இப்படி ஒவ்வொரு முறை பேசும்போதும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படவுள்ளார். அது தொடர்பான ஃபைல்கள் தயாராக இருக்கின்றன. அறிவிப்புதான் வெளியாவது மட்டும்தான் பாக்கி எனப் பல்வேறு செய்திகள் வெளியாகி அடங்குவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஒருசில வாரங்களாக ஏதாவது ஒரு செய்தியைக் கசிய விட்டு கட்சிக்காரர்கள் மற்றும் மக்களின் பல்ஸ் பார்த்து பிறகு அதை அறிவிப்பாக வெளியிடுவது என இவர்களின் அரசியல் விளையாட்டுக்கு நம்மைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற கொதிப்பு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் எழுந்திருக்கிறது என்கிறார்கள் உடன் பிறப்புகள்.
இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி உதயநிதி துணை முதல்வர் ஆவது உறுதி எனச் செய்திகள் பரவ, அதுவும் இல்லாமல் போனது. இப்போது மீண்டும், `மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’ என முதல்வர் கூறியிருக்கிறார். மறுபடியும் மறுபடியுமா எனக் கட்சிக்காரர்களே சோர்வாகியிருக்கிறார்கள். முதல்வரின் இந்தக் கூற்று யாரைச் சொல்கிறார் என்ற விசாரணையில் இறங்கினோம்…
“உதயநிதி துணை முதல்வர் ஆகப் போகிறார்’ என செப்டம்பர் 18-ம் தேதி மீண்டும் பரபரப்பு கிளம்பவும், தி.மு.க வட்டாரங்களெல்லாம் விறுவிறுப்பாகிவிட்டன.” எனப் பேசத் தொடங்கினார் அறிவாலய சீனியர் ஒருவர். மேலும் தொடர்ந்தவர், “அறிவாலயத்திலிருந்த இரண்டு நிர்வாகிகள், பட்டாசுகளை தயாராக வைத்திருக்கச் சொல்லி சென்னை மாநகர தி.மு.க-வினருக்கு தகவல் அனுப்பவும், உதயநிதி துணை முதல்வர் ஆவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. ஜூனியர் அமைச்சர்கள் பலரும் பட்டுச் சால்வை, வேட்டிகளை அவசர அவசரமாக வாங்கிவரச் சொல்லியிருக்கிறார்கள். முப்பெரும் விழா முடிந்து ஊருக்குக் கிளம்பத் தயாரான கழக நிர்வாகிகள் பலரும், பயணத்தை கேன்சல் செய்துவிட்டு சென்னையிலேயே இருந்திருக்கின்றனர். ஆனால், அன்றைய தினம் முடியும்வரையில் அறிவிப்பு ஏதும் வராததால், காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
“அமைச்சர் உதயநிதி சொன்னபடி, அது முதல்வரின் கையில்தான் இருக்கிறது. ‘அரசாணையெல்லாம் தயார். துறைச் செயலாளரும் தயார். முதல்வர் ஓ.கே சொல்லிவிட்டால் அறிவிப்பு வெளியாகிவிடும்’ என்கிறார்கள்.
ஆனால், முதல்வர் இன்னும் ஓ.கே சொல்லவில்லையாம். ‘இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒருசில நாள்கள் கூட தள்ளிப்போகலாம்’ என்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ, ‘இப்போதைக்கு துணை முதல்வர் அறிவிப்பு வெளியாகாது. புரட்டாசி மாதம் முடியும் வரையாவது இந்த முடிவு தள்ளிப்போகலாம்” என்றார்.
மேலும் தொடர்ந்தவர், “சமீபத்தில் முதல்வர் வீட்டில் சீனியர் நிர்வாகிகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, “உதயநிதியைத் துணை முதல்வராக அறிவிப்பது என்றால் கூடுதலாக ஏதாவது ஒரு பெரிய துறையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அதற்காக முக்கியமான துறைகளை வைத்திருக்கும் சீனியர்களுடன் கலந்து பேச வேண்டும்” எனச் சிலர் ஆலோசனை சொலியிருக்கிறார்களாம். மேலும், “அப்படிச் சீனியர்களிடமிருந்து முக்கியத் துறைகளை எடுப்பது என முடிவானால் மாற்றாக அவர்களுக்கு என்ன கொடுப்பது அல்லது இப்போது உதயநிதி வைத்திருக்கும் துறையை மட்டுமே வைத்து துணை முதல்வராக அறிவித்துவிடலாமா? எனப் பல்வேறு வகைகளிலும் ஆலோசனைகள் செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள்.
உதயநிதி வசம் இப்போது இருக்கும் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை முதல்வர் வசமிருந்தது. அந்தத் துறையை வைத்துக்கொண்டு உதயநிதியால் எந்தத் துறையில் வேண்டுமானாலும் ஆய்வு நடத்த முடியும். துறைசார் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடியும். எனவே, உதயநிதிக்குப் புதிதாக எந்தத் துறையையும் கொடுக்க வேண்டாம். எனவே, சீனியர்களிடமிருந்து துறையை எடுப்பது என்ற பேச்சும் தேவையில்லாதது.
இப்போது இல்லையென்றாலும் எப்படியும் உதயநிதியைத் துணை முதல்வராக அறிவிக்கத்தான் போகிறோம். எனவே, அது தொடர்பான அறிவிப்புகளை விரைவில் வெளியிடுங்கள் அல்லது இப்போதைக்கு இல்லை என்பதையாவது தெளிவுபடுத்துங்கள். இது தொடர்பாக எழும் செய்திகள் கட்சிக்காரர்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது’ எனச் சீனியர்கள் சிலர் தலைமையிடம் சொல்லியிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியைச் சந்திக்க வரும் செப்டம்பர் 26-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர். சந்திப்பு முடிந்து வந்ததும் செப்டம்பர் 28-ம் தேதி காஞ்சியில் நடக்கும் பவளவிழா மாநாட்டில் பங்கேற்கிறார். பிறகு, அக்டோபர் 2-ம் தேதி வி.சி.க-வின் மது விலக்கு மாநாடு இருக்கிறது. எனவே, இவையெல்லாம் முடிந்த பிறகு அறிவிப்பு வெளியாகலாம். மாற்றம் என்பது உதயநிதிக்கும், ஏமாற்றம் இருக்காது என்பது சீனியர்களின் துறை மாற்றம் இருக்காது என்பதையுமே முதல்வர் சொல்லியிருக்கிறார். சின்ன அளவில் அமைச்சரவை மாற்றமும், ஐந்து அல்லது ஆறு மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும்” என முடித்தார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88