டாஸ்மாக்கை அரசே நடத்தும் தமிழ்நாட்டில், தி.மு.க-வின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தவிருக்கிறது. இதற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் அ.தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்த நாள்முதல், இரு கட்சிகளின் தலைவர்களும் பேசும் அரசியல் பேச்சுகள் நாளுக்கு நாள் விவாதப்பொருளாக மாறிவருகிறது.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஜூனியர் விகடன் இதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், “திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் முதல்வராகும்போது 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவர் தொல்.திருமாவளவனை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லையே” என தெரிவித்திருந்தார். அரசியல் தளத்தில் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சொந்த மாவட்டத்துக்காரன் என்ற முறையில், கடந்த 40 ஆண்டுகளாக அறிவேன். மாணவப் பருவத்திலேயே அவருடன் பல்வேறு மேடைகளை பகிர்ந்துகொண்டவன். அவருடைய இடதுசாரி சிந்தனை இன்று இந்தியா முழுவதிலும் எதிரொலிக்கிறது என்பதில் நானும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் பெருமை கொள்கிறோம். மதவாதத்தை ஒழிப்பதில், சமூக நீதியைக் காப்பதில் திமுக-வுடன் தோள் கொடுக்கிற அரசியல் கட்சிகளில் நல்ல இடத்தில் விசிக உள்ளது. இந்த சூழலில், அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கைப் புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அரணுக்கு, அரசியல் அறத்திற்கு ஏற்புடையது அல்ல.
இன்னும் சொல்லப்போனால், இடதுசாரி சிந்தனைகளையும் தாண்டி, தமிழ்மொழி, தமிழ் இனம் என்ற வரலாற்றுப் பின்னணி புரிதலுடைய திருமாவளவன் நிச்சயமாக இந்தக் கருத்தை ஏற்க மாட்டார். இந்தக் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார். இத்தகைய கருத்தைக் கூறியவர்களை அவர் அனுமதிக்கமாட்டார் என்கிற நம்பிக்கை திமுகவுக்கு உள்ளது. திருமாவளவனின் ஒப்புதலுடன் அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருக்க மாட்டார் என்பது என் எண்ணம்” என்றார்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுவதாக செய்திகள் வெளிவரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்தும், அதற்கு ஆ.ராசா பதிலளித்துள்ளதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb