ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்கள் அபேஸ் – சென்னை ஹார்பரில் ஹாலிவுட் பாணியில் நடந்த கன்டெய்னர் கொள்ளை

ஹாலிவுட் சினிமா பாணியில், ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்களை, கன்டெய்னருடன் கடத்திய கும்பலை சென்னை துறைமுகம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்ட கன்டெய்னர் ஒன்றில், பிரபல மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் (DELL) லேப்டாப்கள், ஒரு கன்டெய்னரில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம்தான் இந்த கண்டெய்னரை துறைமுக யார்டில் பாதுகாத்துவந்திருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி கன்டெய்னரை எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட லேப்டாப் நிறுவன ஊழியர்கள் சென்னை துறைமுக யார்டுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், 7-ம் தேதியே கண்டெய்னரும் அதிலிருந்த பொருள்களும் கடத்தப்பட்டிருப்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து துறைமுகம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை இண்டர்நேஷனல் நிறுவன ஊழியர் உள்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

லேப்டாப்

இந்தக் கடத்தலின் பின்னணி குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “ கன்டெய்னர் கடத்தப்பட்டது குறித்து, சென்னை இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன ஊழியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினோம். அப்போதுதான் போலி ஆவணங்கள் மூலம் அந்தக் கன்டெய்னரை சிலர் கடத்திச் சென்றது தெரியவந்தது. கடத்தப்பட்ட கன்டெய்னர் திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதை சிசிடிவி காட்சிகள் மற்றும் ஜி.பி.எஸ் உதவியுடன் கண்டறிந்தோம். இந்த வழக்கில் ஆறு பேரைக் கைது செய்ததோடு கடத்தப்பட்ட லேப்டாப்களையும் மீட்டிருக்கிறோம். கடத்தலில் மூளையாகச் செயல்பட்ட இளவரசனைத் தேடி வருகிறோம்” என்றனர்.

இதுகுறித்து துறைமுகம் உதவி கமிஷனர் ராஜசேகரனிடம் பேசினோம். “துறைமுகத்திலிருந்து கடத்தப்பட்ட கன்டெய்னரில் 5,230 நோட்பேடு லேப்டாப்கள் இருந்திருக்கின்றன. அவற்றை வெளியே எடுத்துச் செல்வதற்கான க்ளியரன்ஸ் கொடுத்தது ஒன்பது ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் வேலைப்பார்த்துவந்த இளவரசன் என்பது தெரியவந்தது. மேலும், கன்டெய்னர் கடத்தப்பட்ட நாள் முதல் இளவரசனும் வேலைக்கு வரவில்லை.

இதற்கிடையே லேப்டாப் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவர்கள் ரகசியமாக ஜி.பி.ஆர்.எஸ் கருவிகளை ஒரு சில லேப்டாப்களில் மட்டும் பொருத்தியிருப்பதாகச் சொன்னார்கள். அதைவைத்தே கண்டெய்னர் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தோம். அந்தக் கண்டெய்னரிலிருந்து 5,207 நோட்பேட் லேப்டாப்களைக் கைப்பற்றியிருக்கிறோம். அதன் மதிப்பு சுமார் ரூ.35 கோடி.

ஹாலிவுட் சினிமா பாணியில் திட்டமிட்டு இந்தக் கடத்தல் நடந்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் எஸ்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த டிரெய்லர் டிரைவர் மணிகண்டன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பால்ராஜ், கடத்தலுக்கு உதவிய திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த முத்துராஜ் ஆகிய ஆறுபேரைக் கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இளவரசன், 23 நோட்பேடுகளுடன் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb