நேத்து சினிமால இருந்து வந்தவர் துணை முதல்வரா? ஆதவ் அர்ஜுனாவின் கேள்வியும், ஆ.ராசாவின் எதிர்வினையும்!

டாஸ்மாக்கை அரசே நடத்தும் தமிழ்நாட்டில், தி.மு.க-வின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தவிருக்கிறது. இதற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் அ.தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்த நாள்முதல், இரு கட்சிகளின் தலைவர்களும் பேசும் அரசியல் பேச்சுகள் நாளுக்கு நாள் விவாதப்பொருளாக மாறிவருகிறது.

திருமாவளவன், ஸ்டாலின்

அந்த வரிசையில், வி.சி.க-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, `நேற்று சினிமால வந்தவர் துணை முதலமைச்சர் ஆகவேண்டும் என்று சொல்லும்போது, 40 வருஷமா அரசியலில் இருக்கின்ற தலைவர் திருமாவளவன் ஆகக்கூடாதா’ என்பது போல தனியார் ஊடக நேர்காணலில் பேசியிருக்கிறார்.

அதேபோல், விகடனுடனான பேட்டியிலும், “தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆந்திராவில் துணை முதலமைச்சர் பதவியைக் கூட்டணி கட்சித் தலைவருக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியதுதான் அரசியல் முதிர்ச்சி. தமிழ்நாட்டில் 2026-ல் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது” என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இத்தகைய பேச்சுகளுக்கு தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா எதிர்வினையாற்றியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா

செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஆ.ராசா, “திருமாவளவனின் இடதுசாரி சிந்தனை இந்திய முழுக்க எதிரொலிக்கிறது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இன்று மதவாதத்தை ஒழிப்பதிலும், சமூக நீதியைக் காப்பதிலும் தி.மு.க-வுடன் நிற்கிற அரசியல் கட்சிகளில் நல்ல இடத்தில் இருக்கின்ற கட்சி வி.சி.க.

ஆ.ராசா

இப்படியான சூழலில், அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்திருக்கின்ற ஒருவர் கொள்கைப் புரிதலின்றி பேசியிருப்பது கூட்டணி அரண் மற்றும் அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவனின் அனுமதியோடு அவர் இதைப் பேசியிருக்க மாட்டார். இந்தக் கருத்தை திருமாவளவன் ஏற்க மாட்டார். ஏற்கக்கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம். நிச்சயமாக இந்தக் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.