Vijay: “விஜய் மாநாடு, திமுகவுக்கு பயம்; முதல் கோணல் முற்றிலும் கோணல்..” – அமைச்சர் எல்.முருகன்

சென்னை குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார். இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் சென்று பார்த்தார்.

தானிய வரைப்படத்துடன் பாஜக நிர்வாகி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “ஆந்திரா லட்டு விவகாரத்தில் இந்தியாவின் உயர்தரமான லேப்-பில் லட்டில் கொழுப்பு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா அரசு சரியான நேரத்தில் செயல்பட்டு, உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஜெகன் மோகன் ஆட்சியில் கோயிலுக்கு சம்மந்தமில்லதவர்கள், பல மதத்தைச் சேர்ந்தவர்கள் கூட ட்ரஸ்டிகளாக நியமித்ததால்தான் இந்த சிக்கல் வந்திருக்கிறது. அறநிலையத் துறையை பக்தர்களிடமே கொடுத்து விடுங்கள் என்பதை பல ஆண்டுகளாக நாங்கள் கோரி வருகிறோம்.

கோயில் விவகாரத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அதை நிர்வாகம் செய்வது சரியில்லாத ஒன்று. அரசு பக்தர்களிடமே கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் சரியாகும். அம்மா உணவகம் அரசின் திட்டம். அந்தத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கிறது. எனவே அது தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைப் பெயர் அடிபடுகிறது என்றால், அது தொடர்பாக காங்கிரஸ் கட்சிதான் நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும்.

எல்.முருகன்

விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கூட கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததும் வந்த இந்துக்களின் முதல் பண்டிகை என்றுக்கூட இதைச் சொல்லலாம். அந்த விழாவுக்காக குறைந்தபட்சம் அவர் வாழ்த்துகளையாவது சொல்ல வேண்டும் என பெரும்பான்மையான இந்துகள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வாழ்த்து கூறவில்லை. ஆனால், இந்தக் கொள்கைக்கு முரணான பெரியாருக்கு மரியாதை செய்ய அங்கு செல்கிறார். அது அவர் விருப்பம். அதில் குறைக் கூற எதுவும் இல்லை.

ஆனால், ஒரு சமூக மக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் எப்படி பொதுவானவராக இருக்க முடியும்… அனைத்து தரப்பு மக்களையும் அவரால் ஒரே மாதிரி பார்க்க முடியாது என்பதுதான் என் கருத்து. விஜய் மாநாடு குறித்து தி.மு.க-வுக்கு பயம் இருப்பதாகதான் நினைக்கிறேன். தி.மு.க-வை தவிர வேறு எந்தக் கட்சியும் வளரக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது திமுக. ஜனநாயக ரீதியில் கட்சி தொடங்கி மாநாடு நடத்த நடிகர் விஜய் கட்சியினர் அனுமதி கேட்டால், அனுமதி கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை.

முதல்வர் ஸ்டாலின் – நடிகர் விஜய்

இதை இவ்வளவு பெரிய சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய அவசியமில்லை. விஜய்-ன் அரசியல் வருகை… விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது முதல் கோணல்… முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். எனவே போகப் போகத்தான் அவரின் அரசியல் குறித்து தெரியும். 2014-க்கு முன்னாள் ஆட்சியில் இருந்தது UPA அரசு. அப்போது மீனவர்கள் தினம் தினம் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தப் பிறகு, ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடக்கவில்லை. மீனவர்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை மீட்டு வருகிறோம்.

ஆழ்கடலில் மீன்பிடிக்க, ஆழ்கடல் படகுக்கு 30 சதவிகித வங்கிக்கடன் கொடுக்கிறோம். இதை தவிர்த்து, மீனவர்கள் எல்லைப் பகுதியை கடக்காமல் இருக்க, மீனவர்களின் படகுகளில் பொருத்துவதற்கு 1 லட்சம் ஜிபிஎஸ் கருவிகள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே கடல் பாசிக்கென தனி பூங்காவை தமிழ்நாட்டில் கொண்டுவந்திருக்கிறது பா.ஜ.க அரசு. கடல் சீற்றத்தால் எல்லை தாண்டிப் போகும் மீனவர்களின் படகுகள் தான் கைப்பற்றப்படுகிறது. அதை மீட்பதற்கான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டார்.