பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி… காசா குறித்துப் பேசியது என்ன?

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்துப் பேசினார்.

இந்த இருதரப்புச் சந்திப்பில் பிரதமர் மோடி காசாவின் நிலைகுறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்ததுடன், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் ஹெச்.இ.மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்தார்.

பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்தார். மேலும், இந்தியா பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதையும் உறுதிப்படுத்தினார்.” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் இரு நாடுகள் தீர்வை (Two State Solution) நீண்டகாலமாக இந்தியா வலியுறுத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த முதல் நாடுகளில் ஒன்று இந்தியா. அதே நேரம் காசாவின் நிலைமை குறித்தும் கவலைத் தெரிவித்திருக்கிறது.

சில நாள்களுக்குமுன் ஐ.நா-வில் இஸ்ரேல், பாலஸ்தீனம் பகுதியில் ‘சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்’ என்பதற்காக நடத்தப்பட்ட வாக்களிப்பில் இந்தியா வாக்களிக்காமல் விலகியது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நீடித்துள்ளது. இதில் 16,500 குழந்தைகள் உட்பட 40,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியா காசாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறது.

பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி

பாலஸ்தீன அதிபரைச் சந்தித்தது குறித்து பிரதமர் மோடி, “பாலஸ்தீனத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் மீட்டுக்கொண்டுவர இந்தியா தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. பாலஸ்தீன மக்களுடனான இந்தியாவின் நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.