“வக்பு நிலத்திற்குத் தடையில்லா சான்று கொடுக்க முடியாது. வக்பு நிலமாக இல்லாதபோது எதற்காக எங்களைத் தேடி வந்து சான்றைப் பெற வேண்டும்?” என்று வக்பு வாரியத்தின் புதிய தலைவரும் ராமநாதபுரம் எம்.பி-யுமான நவாஸ்கனி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறையிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயிலும் அந்த கிராமத்தில் உள்ள இந்துக்களிடம் உள்ள 389 ஏக்கர் நிலமும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது, அதை விற்கவோ வாங்கவோ வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட விவகாரம் நீதிமன்றம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு, திருச்செந்துறை விவகாரத்தை முக்கியமாகக் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக வக்பு வாரிய தலைவராக இருந்த அப்துல் ரகுமான் ராஜினாமா செய்தார்.
வக்பு வாரியத்துக்குப் புதிய வக்பு வாரியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மதுரை வந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி செய்தியாளர்களிடம் பேசும்போது, “வக்பு சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்கள் பத்திரப் பதிவு செய்யத் தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதிக்காது. 1958 ல் நடைபெற்ற சர்வே அடிப்படையில் இருக்கக்கூடிய அத்தனை வக்பு சொத்துக்களையும் ஜீரோ வேல்யூ ஆக்கி அதைப் பதிவு செய்யக்கூடாது எனப் பத்திரப்பதிவுத்துறைக்கு வக்பு வாரியத்தின் சார்பாகக் கோரிக்கை அனுப்பப்பட்டது. அதில் ஒரு சில இடங்களில் பரப்பளவுகள் சரியாகக் கொடுக்கப்படாததால், வக்பு வாரிய இடம்போக உட்பிரிவில் வேறு சில இடங்கள் இருந்ததைப் பதிவு செய்ய முடியாததால் வக்பு வாரியத்தை அணுகினார்கள்.
ஆவணங்களைச் சரிபார்த்து அதன் அடிப்படையில் எங்களுக்கு உரிய இடம் போக மற்ற இடங்களைப் பதிவு செய்வதில் ஆட்சேபனை இல்லை எனத் தடையில்லா சான்று வழங்கினர். இது பொதுமக்களுக்குச் சிரமத்தைக் கொடுக்கும் என அரசுக்கு வைத்த கோரிக்கையை அடுத்து, பதிவு செய்யப்பட்ட சர்வேயர்களை வைத்து வக்பு நிலங்களை அளவிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் பணிகள் முடிந்த பிறகு வக்பு வாரியம் தடையில்லா சான்று கொடுக்க தேவையில்லை. வக்பு சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் பத்திரம் பதிவு செய்ய வக்பு வாரியம் தடையில்லா சான்று கொடுக்க முடியாது. வக்பு நிலம் இல்லாதவர்கள் எதற்காக எங்களைத் தேடி வந்து அந்த சான்றைப் பெற வேண்டும்? ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டுவோம். சொத்துக்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம். இதுவரை வக்பு சொத்துகளை விற்கத் தடையில்லா சான்று வழங்கவில்லை, வழங்கவும் முடியாது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், சாத்தியமில்லாத ஒன்று. ஐந்து மாநிலத்திற்குக் கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலையில், இவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமே இல்லை. பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள், குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்வது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் கைது செய்தால் மீனவர்களை விடுவித்து படகுகளையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்போது படகுகளைப் பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு வருகிறார்கள். அது அவர்களின் வாழ்வாதாரம்.
கடந்த காலங்களில் அவர்களுக்குச் சிறைத் தண்டனை கிடையாது. தற்போது நீதிமன்றங்களில் சிறைத் தண்டனை, அபராதம் விற்கிறார்கள் என்றால் இந்திய அரசு இதைக் கண்டிக்கவில்லை. நம்முடைய பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அரசைக் கண்டித்தால் நிச்சயம் இந்த கைது மற்றும் படகுகள் பறிமுதல் செய்வது தடுக்கப்படும். இந்தியா சொல்வதைக் கேட்காத நிலையில் அந்த அரசு இல்லை, ஆனால் இந்திய அரசு அவர்களை வலியுறுத்துவதில்லை.