தொழில்துறை வளர்ச்சி மாநிலம் முழுக்க சீராக இருக்கணும்!

தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. ஒப்பீட்டளவில் பொருளாதார பங்களிப்பில் மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழ்நாடு தான் இரண்டாவது மாநிலமாக விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும், விரிவுப்படுத்தப்பட்ட மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழில்துறை நிறுவனங்களும் ஆகும்.

குறிப்பாக 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தின்(SEZ) வாயிலாக எண்ணற்ற வேலைவாய்ப்புகளும், நாட்டின் பொருளாதாரமும் அதிகளவில் வளர்ச்சி பெற்றது எனலாம். இந்தியாவில் மொத்தம் 1022 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இதில், தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வகையில் பங்கினை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வந்தாலும், அது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சீரான வளர்ச்சியாக இல்லை. பல்வேறு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பக்கம் படையெடுத்து வந்தாலும் தென்தமிழகம் பக்கம் எந்த குறிப்பிட்ட தொழில்துறை வளர்ச்சியும் ஏற்படவில்லை என்கிறார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் அவர்கள். இதுகுறித்து அவர் கூறியது,

“தமிழ்நாடு பொருளாதாரரீதியாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஓசூர் என 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டல பொருளாதாரத்தின் மாநில பங்களிப்பு 7% ஆகும் / மேலும், இங்கு 30% ஆட்டோமொபைல் நிறுவனங்களும் 40% ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. ஆனால், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்தின் மாநில பொருளாதார பங்களிப்பு வெறும் 4% மட்டுமே. அந்நிய நேரடி முதலீடு(FDI) நிறுவனங்கள் பெரும்பாலும் சென்னை மண்டலத்தை மையப்படுத்தியே நிறுவப்படுகிறது. இது, மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியானது சீரற்று இருப்பதையே குறிக்கிறது. தூத்துக்குடி போன்ற சில இடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் தென் தமிழ்நாட்டில் பெரிய நிறுவனங்களின் இருப்பு எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.

சென்னையை பொருத்தமட்டில் வடமேற்கில் ராணிப்பேட்டை, வாலாஜாபாத். தெற்கில் ஈசிஆர்-ல் மகாபலிபுரம் வரையிலும், ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு வரையிலும், மேற்கில் ஒரகடம், திருப்பெரும்புதூர் என பெரும் முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் இப்பகுதியை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் மத்தியில் கூட கணிசமான நிறுவனங்களின் வளர்ச்சியும் அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால், மதுரை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள 10 மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டாலும் பெரும் முதலீட்டு நிறுவனங்களின் வரவு இங்கில்லை.

தூத்துக்குடியை பொருத்தளவில் 16 நிறுவனங்கள் இருக்கிறது, ஆனாலும் அவை சிறுமுதலீட்டு எளிய நிறுவனங்களாகவே செயல்படுகிறது. இதுவல்லாமல் ஆங்காங்கே சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் செயல்படுகிறது. ஆனால், இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு பெரிய முதலீட்டு நிறுவனம் இங்கு நிறுவப்பட வேண்டும் என்பதே.

`சென்னை – கன்னியாகுமரி இண்டஸ்ட்ரி காரிடார்’னு அறிவிப்பு வந்திருந்தது. அப்படியும் இங்கு நிறுவனங்கள் நிறுவிய பாடில்லை.

2011ல் `மதுரை-தூத்துக்குடி இண்டஸ்ட்ரி காரிடார் எக்செலன்ஸ்’ என அறிவிப்பு வெளியானது. அதன்படி தென்தமிழகத்தில் குறிப்பிடும்படியான வளர்ச்சியும், பெருநிறுவனங்களும் நிறுவப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவையெல்லாம் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மட்டுமே தொடங்கப்பட்டது. இப்போது வரையிலும் கூட, இத்திட்டங்கள் எதுவும் நடக்குமா? நடக்காதா? என்பது வெளிப்படையாகவும் தெரியவில்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

திரு. ஜெகதீசன்,
தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

தூத்துக்குடிக்கும் எட்டயபுரத்திற்கு இடையுள்ள பகுதியில் குறைந்த நில முதலீட்டில் சுமார் 1000 ஏக்கர் நிலங்களை நிறுவனங்கள் தொடங்கப் பயன்படுத்தலாம். இப்பகுதியை சுற்றிலும் சுமார் 200 முதல் 300 குடும்பங்கள் வரை உள்ளது. இதனால், சிறந்த வேலைவாய்ப்புகளும் கிடைத்துவிடும். அவர்களின் திறனை நிறுவனத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள திறன் மேம்பாட்டு மையங்கள் திறந்து அவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு, விமானநிலையத்துக்கும் 40 கி.மீ தொலைவு தான். போக்குவரத்திற்கு எந்தச் சிக்கலும் இங்கு இல்லை. கூடங்குளத்தில் இருந்து வரும் மின்சார வழியும் இப்பகுதிகளை கடந்து செல்வதால் மின்சார வசதியும் எளிதாகக் கிடைத்துவிடுகிறது.

பெருமுதலீட்டில் நிறுவனம் நிறுவ இவ்வளவு வசதிகளும் மூலதனங்களும் இங்கு கிடைக்கிறது. ஆனால், நிலத்தடி நீரை பற்றாக்குறையை மட்டுமே பெரும் காரணமாக சொல்லி தொழில் தொடங்க யோசிக்கிறார்கள்.

இதற்கும், தீர்வு இருக்கிறது. இங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள சாயல்குடியில் கடற்கரை தொடங்கிவிடுகிறது. கடல்நீரை பயன்பாட்டு நீராக மாற்றி தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். இதை அரசு தான் முன்னெடுத்து செயல்படுத்தி தரவேண்டும்.

தென்மண்டலத்தில் பெரும்பான்மையாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பது என்றால் ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை உற்பத்தி செய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் மையங்களை தான்(MSME) குறிப்பிட வேண்டும். இந்த MSME நிறுவனங்களும் பெரும் லாபத்தை ஈட்டுவதாக இல்லை. சில நிறுவனங்கள் பிரேக் ஈவன் நிலையில் தான் பெரும்பாலும் செயல்பட்டு வருகிறது. காரணம், பணமதிப்பிழப்பு, கோவிட், அதிகப்படியான வரி விதிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

மதுரை மண்டலத்தில் மட்டும் 30 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. ஆனால், அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் உள்ளதா என்பது கேள்விக்குறியே! பெருநிறுவன முதலீட்டுக்கான அனைத்து மூலதன வசதிகளும் தென்தமிழகத்தில் இருக்கிறது. இதற்கான தீர்வை அரசு தான் வழங்க வேண்டும்” என்று அரசுக்கு தென்தமிழக மக்கள் சார்பாக தன்னுடைய கோரிக்கையை முன்வைக்கிறார்.