தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வள்ளிக்குகை அருகிலுள்ள யாக மண்டபத்தில் சத்ருசம்ஹார யாகம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2047-ம் ஆண்டு இந்தியா 100வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டும் போது உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நாடாக, உலகத்திற்குத் தலைமை வகிக்கும் நாடாக வல்லரசு நாடாக இந்தியா மாறும்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று முதல் 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வருவதற்காகக் கல்வியாளர்கள், நீதிபதிகள், துணைவேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்துக் கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமான ஒன்று. அது காலத்தின் கட்டாயமானதாகும்.” என்று கூறினார்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகக் கையெழுத்திட்டது தமிழக அரசு. மத்திய அரசு வழங்கக்கூடிய நிதிக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அந்த நிதி வழங்கப்படும். தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று வந்ததைப் பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலின் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம்தான் மது ஒழிப்பு மாநாடு.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை துரிதமாகச் செயல்பட்டு தமிழக மீனவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க ஜிபிஎஸ் கருவிகள் போன்றவற்றை வழங்கியுள்ளோம். மீனவர்கள் ஆழ் கடல் மீன் பிடிக்க மானியத்துடன் கூடிய பெரிய மீன்பிடி படகுகளை வழங்கியுள்ளோம். மீனவர்களுக்குக் கடல் பாசி பூங்கா கொண்டு வந்துள்ளோம். மீனவர் நலனுக்காகத் தொடர்ந்து இந்த ஆட்சி பாடுபட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக இலங்கை அரசிடமிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறிய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடைகளில் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது.
கிராமங்களில் அங்கன்வாடி மையம், பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடைகள் உள்ளன. உலகில் 10 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பா.ஜ.கதான். தமிழகத்தில் 1 கோடி பேரை பா.ஜ.கவில் உறுப்பினர்களாகச் சேர்க்க உள்ளோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. வரும் 2026 இல் தமிழகத்தில் பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்.” என்று கூறியுள்ளார்.