வளரும் மாநிலங்களில் முதல் மாநிலம்… தொடரட்டும் தமிழ்நாட்டின் வெற்றிநடை!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, அந்த மக்களின் கடினமான உழைப்பின் பயனாக விளைவது. மக்கள் எந்தளவுக்குக் கஷ்டப்பட்டு உழைக் கிறார்களோ, அந்தளவுக்கு அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்பதற்கு ஜப்பானும் சிங்கப்பூரும் மிகச் சிறந்த உதாரணங்கள் ஆகும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை, கடினமாக உழைத்து தானும் முன்னேறி, தனது மாநிலத்தையும் பொருளாதார வளர்ச்சி அடையச் செய்வதில் தமிழ்நாட்டு மக்கள் காட்டும் ஆர்வமும் அக்கறையும் அலாதியானது என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு புள்ளிவிவரம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (PM-EAC) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, நடந்த சீர்திருத்தங்களின் விளைவாக சிறப்பான பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலங்களில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது நம் தமிழ்நாடு.

இந்தக் குழு தந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 1990-91-ல் 14.6 சதவிகிதமாக இருந்த மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சி (GSDP), 2023-24-ல் 13.3 சதவிகித மாகக் குறைந்துள்ளது. 1990-91-ல் 12.6 சதவிகிதமாக இருந்த உ.பி-யின் பொருளாதார வளர்ச்சி, 2023-24-ல் 8.9 சதவிகிதமாகவும், 7.9 சதவிகிதமாக இருந்த மேற்கு வங்க மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, 2023-24-ல் 5.6 சதவிகிதமாகவும் உள்ளது.

ஆனால், 1990-91-ம் ஆண்டில் 7.1 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2023-24-ம் ஆண்டில் 8.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கர்நாடகா 5.3 சதவிகிதத்தில் இருந்து 8.2 சதவிகிதமாகவும், குஜராத் 6.4 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளில் ஆட்சி மாற்றங்கள், இயற்கைச் சீரழிவுகள், பொருளாதார பாதிப்புகள் என எத்தனையோ நிகழ்வுகள் நடந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர முக்கியமான காரணம், இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி மனப்பான்மைதான் (Growth Mindset). புறச்சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைச் சாதகமாக மாற்றிக் கொண்டு, வளர்வதே வளர்ச்சிக்கான மனப்பான்மை. இது தமிழ்நாட்டு மக்களின் ரத்தத்தில் இயற்கையாகவே இருப்பதால்தான் இத்தனை பெரிய வளர்ச்சி!

ஆனால், இந்த வளர்ச்சியை நாம் இத்துடன் நிறுத்திக்கொண்டுவிடக் கூடாது. 8.9 சதவிகிதமாக இருக்கும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வரும் ஆண்டு களில் இரட்டை இலக்கத்தில் அதாவது, குறைந்தபட்சம் 10 சதவிகிதத்துக்குமேல் இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து முன்னேற வேண்டும்!

‘அரசும் மக்களும் ஒன்றுபட்டு உழைத்தால், வெற்றிமேல் வெற்றியே’ என்பதைத் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது இந்த 8.9% வளர்ச்சி. தொடரட்டும் தமிழ்நாட்டின் வெற்றிநடை!

– ஆசிரியர்