`தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 21-ஆக குறைக்க வேண்டும்!’ – மத்திய அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

இந்தியாவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது 25-ஆக இருக்கும் நிலையில், அதனை பா.ஜ.க அரசு 21-ஆகக் குறைக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில், கமல்ஹாசன் தலைமையில் ம.நீ.ம கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இத்தகைய கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்:

*பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஆய்வுகள் செய்து அறிக்கை மற்றும் பரிந்துரைகளை மாநில, மத்திய அரசுக்கு சமர்ப்பித்தல்.

*சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

*தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

*வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தவாறு, சராசரி உற்பத்திச் செலவுடன், 50 சதவிகித லாபத்தை அளிக்கும் வகையில் வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உடனடியாக சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் விவகாரம்

*தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இந்தியா, இலங்கை இடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

*மத்திய அரசு, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது.

*ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சிக்கு வன்மையான கண்டனம்.

தேர்தல்

*இன்றைய கால மாற்றத்தையும், கல்வி வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு, இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

*அரசின் நலத்திட்டங்கள் நலிவடைந்த மக்களை நேரடியாகச் சென்று அடையும்படி `அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை (Universal Basic Income Card)’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.