`நடிகர் விஜய் கட்சியைப் பார்த்து திமுக பயப்படுகிறது!’ – மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நென்மேனியில் அ.தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தி.மு.க-வில் மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் ‘எங்கள் அண்ணா’. அவருக்கு பின்பு இன்பநிதி தான் ‘எங்கள் அண்ணா’ என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். ‘அண்ணா’ என்ற வார்த்தைக்கு தி.மு.க மதிப்பில்லாமல் செய்துவிட்டது. அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றதன் பலனாக தமிழகத்தில் ஆயிரம் கோடியில் கால்நடை பூங்கா உருவாக்கினார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று சைக்கிள் ஓட்டுகிறார்” என விமர்சித்துப் பேசினார்.

மாஃபா பாண்டியராஜன்

பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், “மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அ.தி.மு.க ஆதரிக்கிறது. கூட்டணி இருக்கும்போது ஒரு பேச்சும், கூட்டணி இல்லாதபோது ஒரு பேச்சு பேசுவதும் அ.தி.மு.க-வுக்குப் பழக்கம் கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலமாக உள்ளாட்சித் தேர்தலையும் முறைப்படுத்துவதை அ.தி.மு.க வரவேற்கிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிதயால் அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரியும் என்று கூறுவதை நாங்கள் நம்பவில்லை. தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் வந்தாலும் அ.தி.மு.க பயப்படாது. விஜய் கட்சியைப் பார்த்து தி.மு.க பயப்படுவதால்தான் அவருடைய மாநாட்டுக்குப் பல்வேறு நிபந்தனைகள் விதித்திருக்கின்றனர். தி.மு.க ஆட்சியை வெளியேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் செய்தால்தான் நடிகர் விஜய் கட்சிக்குப் பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறினார்.

பூஜை
சிறப்பு பூஜை

முன்னதாக சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த மாஃபா பாண்டியராஜன், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தல் மூலமாக மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என வேண்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.