சமீபத்தில் கமலாலயத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன் கடைசியில் சிறுத்துப் போய் இருக்கிறார். ஆட்சியில் பங்கு கேட்போம் என ஒரு வீடியோவை பரவ விட்டார். பிறகு நான் போடவில்லை அட்மின் தான் போட்டார் என சினிமா போல நாடகத்தை நடத்தி வருகிறார். முதலமைச்சரைச் சந்தித்த பின் திருமாவளவன் சிறுத்துப் போய்விட்டார். தி.மு.க-வை மேடையில் வைத்துக் கொண்டு மதுவிலக்கைப் பற்றி எப்படிப் பேச முடியும். திருமாவளவனின் மதுவிலக்கு மாநாட்டிற்கு டாஸ்மாக் நடத்துபவர்கள்தான் ஸ்பான்சர்களாக இருக்கிறார்கள்.
அந்த மாநாடு தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஒத்துக் கொள்ளாத தமிழக அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையைக் கொடுத்தால் ஒப்புக்கொள்வார்களா” எனக் கொதித்தார்.
`திமுக சாயலில் இன்னொரு கட்சி ஏன்?’
நடிகர் விஜயின் அரசியல் குறித்துப் பேசியவர், “தி.மு.க சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ்நாட்டில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும். விஜய் வேற்றுப் பாதையில் பயணிப்பாரென நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இப்படித்தான் எனக் காட்டிவிட்டார். இரு மொழிக் கொள்கை என்பது தி.மு.க-வின் ஏமாற்று வேலை. கும்மிடிப்பூண்டியைத் தாண்டினால் யாருக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க இருக்கிறது.
தி.மு.க பாதையில் விஜய் திராவிட சாயலைச் சாயமாகப் பூசிக் கொண்டார். சாயம் வெளுக்கிறதா அல்லது வேறொரு சாயத்தைப் பூசிக் கொள்வாரா என்பது போகப் போகவே தெரியும். ஒரு திரைப்படத்தைத் திரையிட விடவில்லை. ஒரு மாநாட்டை நடத்த விட மாட்டேங்கிறார்கள். தேசிய பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தைப் பூசிக் கொண்டால் அவ்வளவுதான். 2026-ம் ஆண்டு தேர்தல் வருவதற்கு அதிக நாள்கள் உள்ளது. திருமாவளவன் என்ன பல்டி அடிக்கப் போகிறார், நடிகர் விஜய் என்ன நிறத்தை மாற்றப் போகிறார் என நிறைய இருக்கிறது” என்றார்.
`முகூர்த்த நாளில் பதவியேற்பார் உதயநிதி’
இதேபோல் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், “முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீட்டுக்களை ஈர்ப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் 10 நாள்களாக சாம்சங் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைப் பற்றி முதல்வர் கண்டுகொள்வதில்லை. திருமாவளவன் கூட்டணியில் உள்ள பிரச்னையால்தான் மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார். கூட்டணிக் கட்சிகளுக்கே தி.மு.க மீது நம்பிக்கை இல்லை.
திடீரென உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் நிச்சயமாக இன்று இருக்காது என நம்பினேன். ஏனெனில் பாட்டிமை அன்று அவர்கள் நிச்சயமாகப் பதவியேற்க மாட்டார்கள். நான் சவால் விடுகிறேன் உதயநிதி துணை முதல்வராகப் பதவியேற்றால் அந்த நாள் முகூர்த்த நாளாகத் தான் இருக்கும். பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்ட விழா அல்ல. உதயநிதிக்கு முடிசூடுவதற்கான தொடக்க விழா. இதுதான் வாரிசு அரசியல். தி.மு.க தொண்டர்கள், உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும், கருணாநிதியின் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்” எனக் கொதித்தார்.
`சந்தர்ப்பங்களை பயன்படுத்துகிறார்..’
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தவர் தமிழிசை. பிறகுத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநராக இருந்தார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார். அந்த நேரத்தில் அண்ணாமலை தலைவராக இருந்தார். அவர் லண்டன் சென்ற பிறகு ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. அதில் தமிழிசைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவேதான் தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காகக் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்கிறார். அனைத்திற்கும் அறிக்கை விடுகிறார். அவர் தமிழக பாஜகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர். ஆனால் அவருக்கு அறிக்கை விடுவதற்கான அதிகாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
3 பேர் மாற்றி, மாற்றி அறிக்கை.. ஏன்?
இதற்கு அண்ணாமலை இன்னும் மாநில தலைவராகவே இருக்கிறார். லண்டனிலிருந்து அறிக்கை வெளியிடுகிறார். ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ராஜாவும் அறிக்கை வெளியிடுகிறார். இவ்வாறு மூன்று பேர் மாற்றி, மாற்றி அறிக்கை வெளியிடுவதில் குழப்பம்தான் வருகிறது. இதன் மூலம் அண்ணாமலைக்குப் போட்டியாகத் தமிழிசை செயல்படுகிறார் என்பதுதான் தெரிகிறது. அவரால் வேறு மாநில அரசியலுக்கும் செல்ல முடியாது. தமிழகத்தில்தான் இருக்க முடியும். ஆனால் அவர் தகுதிக்குத் தகுந்த பொறுப்பு இல்லை. எனவே கட்சி மேலிடம் அவருக்குப் பொறுப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய அரசியலுக்கு அவரை கொண்டு செல்ல வேண்டும்.
அங்கும் அவருக்கும் சாதாரண பதவிகளைக் கொடுக்க முடியாது. நட்டா இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. அவருடைய அறிக்கைகள் சுகாதாரத்துறை அமைச்சர் அளவுக்குத்தான் இருக்கிறது. தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சி தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. எனவே மூன்று மாத காலத்துக்கு எதுவும் நடக்காது. மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர், தேசியத் தலைவர் தேர்வு செய்த பிறகுதான் பிற வேலைகள் நடக்கும். எனவே இந்த மூன்று மாதத்தில் தமிழக அரசியலில் தான் மறக்கடிக்கப்பட்ட தலைவராகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவேதான் அறிக்கை வெளியிடுவது, பேட்டி கொடுப்பதுமாக இருக்கிறார்” என்றார்.