“இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் கிடைக்கும்…” – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!

அறிஞர் அண்ணாவின் 116 -வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு, மதுரையில் அதிமுக., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

செல்லூர் ராஜூ

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய செல்லூர் ராஜூ, “எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி 10 நாள்கள் கூட தாங்காது என்று பேசியவர்தான் கருணாநிதி. எம்ஜிஆரை சாதாரணமாக எடை போட்டு விட்டார்.

விலையில்லா வேஷ்டி சேலை, சத்துணவு திட்டம் மாணவ மாணவிகளுக்கு சீருடை, காலணி என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் எம்ஜிஆர். கருணாநிதி ஆட்சியில் மக்கள் கப்பக்கிழங்கு சாப்பிட்டார்கள். ஒரே கையெழுத்தில் 22,000 ரேஷன் கடைகளை கொண்டு வந்து விலையில்லா அரிசியை மக்களுக்கு கொடுத்த எம்ஜிஆரை மக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.

`ஒரு சொட்டு மது கூட இருக்காது என்றார் ஸ்டாலின்’

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு எப்படி இவர் ஆட்சி நடத்துவார், நான்கு மாதம் கூட ஆட்சி நிலைக்காது என்று பேசினார்கள். நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் வருகின்ற 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.

செல்லூர் ராஜூ

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று ஸ்டாலின் பேசினார். இதையே உதயநிதி ஸ்டாலின் சொன்னார். எங்கள் அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மது கடைகளை மூடி விடுவார், மது ஆலைகளை அப்புறப்படுத்தி விடுவார் என்று கனிமொழி பேசினார், ஒன்றும் நடக்கவில்லை. தற்போது சமையல் பொருள்கள் உள்பட அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இவ்வளவையும் செய்துவிட்டு திமுக சூட்டிங் நடத்துகிறது.

`என்ன முதலீடுகளை ஈர்த்து வந்தார்?’

நான் சவால் விடுகிறேன், நான்கு முறை வெளிநாடு சென்றார் முதலமைச்சர் என்ன முதலீடுகளை ஈர்த்து வந்தார்? அமெரிக்காவில் என்ன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டீர்கள்?

அமெரிக்கா சென்று முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார். பிறந்தால் கருணாநிதி மகனாக பிறக்க வேண்டும். எந்த தியாகமும் செய்யாமல் எந்த உழைப்பும் இல்லாமல் அப்பா முதலமைச்சர் என்பதால் இவரும் முதலமைச்சராகி உள்ளார்.

நேற்று வரை திரிஷா, நயன்தாரவுடன் சினிமாவில் நடித்தவர் தற்போது அமைச்சர். இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் கிடைக்கும்.

செல்லூர் ராஜூ!

`நான் பதவிக்கு வரமாட்டேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்’

திமுகவில் உழைத்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். மூத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்கள், அதனால் நான் பதவிக்கு வரமாட்டேன் என்று முன்பு பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சராகி உள்ளார்.

சட்டமன்றத்தில் எனக்கும், ராஜன் செல்லப்பாவுக்கும் கடைசி இருக்கை கொடுத்தார்கள். நாங்கள் பேசுவது கேட்காது. சட்டமன்றத்தில் உதயநிதி வரும்போது, அனைவரும் எழுந்து நிற்பார்கள். சில சீனியர்கள் எழுந்து நிற்க மாட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு பின்புறம் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்தார்கள்.

“10 வருடமாக அமைச்சராக இருந்தேன், என்மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா?”

பத்து வருடமாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன், என்மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் உள்ளதா? நான் மதுரைக்காரன், எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது இந்த துறை கடுமையான துறை என்று ஜெயலலிதா சொன்னார்.

அழகிரியை எதிர்த்து அரசியல் செய்தவன், எங்களுக்காக சிறைச்சாலை உருவாக்கப்பட்டது என்று சொன்னவன்.

கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. அரசாங்கம் கஜானா காலி, டாஸ்மாக் மூடப்பட்டது பத்திரபதிவு கிடையாது. அந்த நேரத்திலும் கூட நிதி கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.

ரேஷன் கடையில் ஒரு கிலோ உளுந்தம் பருப்பு, ஒரு கிலோ சீனி கொடுப்போம் என்று சொன்னார்கள், கொடுத்தார்களா? ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்கள். செய்தார்களா?

`ஜிம்முக்கு போகிறார், சைக்கிள் ஓட்டுகிறார்..’

பெண்களை அல்லாட விட்டது திமுக, மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்தார்களா? பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களா ?

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகமாகிவிட்டது. அதை கடத்தியதே திமுக நிர்வாகிகள். முதலமைச்சருக்கு அருகாமையில் இருக்கும் ஜாபர் சாதிக் போதை பொருளை கடத்தினார்.

நாங்கள் படிக்கும் காலத்தில் மாங்காய் விற்பார்கள், மிட்டாய் விற்பார்கள் இன்றைக்கு போதை மிட்டாய் விற்கிறார்கள். தமிழ்நாடே போதை மாநிலமாக மாறிவிட்டது.

காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, கலெக்டர் உள்பட அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

நேற்று வரைக்கும் நயன்தாராவுடன் நடித்துக் கொண்டிருந்தவருக்கு துணை முதல்வர் போஸ்டிங் கொடுக்கிறார்கள்.

ஸ்டாலின், கருணாநிதிக்கு பின்னால் நின்றவர். அவருக்கு என்ன திறமை இருக்கிறது? மக்கள் வரிப்பணத்தில் அமெரிக்கா சென்ற மு.க.ஸ்டாலின், ஜிம்முக்கு போகிறார் சைக்கிள் ஓட்டுகிறார். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது” என்று பேசினார்.