“அது பாகிஸ்தானில் இருக்கிறது” கர்நாடக நீதிபதி கருத்தால் சர்ச்சை… கண்டித்த உச்ச நீதிமன்றம்!

கர்நாடக மாநிலத்தின் கோரி பால்யா முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் இடமாக அறியப்படுகிறது. இதற்கிடையில், பெங்களூர் மைசூர் சாலை மேம்பாலம் அருகே போக்குவரத்து பிரச்னைகள் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, “மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷாவிலும் 10 பேர் உள்ளனர்.

நீதிபதி ஸ்ரீஷானந்தா

கோரி பால்யாவிலிருந்து மார்க்கெட்டுக்கு விடப்பட்ட மைசூர் மேம்பாலம் இந்தியாவில் இல்லை. அது பாகிஸ்தானில் இருக்கிறது. அதனால், இந்தியாவின் சட்டம் அதற்கு பொருந்தாது. நீங்கள் எவ்வளவு கண்டிப்பான காவல்துறை அதிகாரியை அங்கே நியமித்தாலும், அவர்கள் அங்கு அடிக்கப்படுவார்கள்.” என முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. பலரும் நீதிபதி ஸ்ரீஷானந்தாவை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கன்னா, பி.ஆர்.கவாய், எஸ்.காந்த், எச்.ராய் ஆகியோருடன் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு கொண்டுவந்தது.

சந்திரசூட்

அப்போது நீதிபதிகள், கர்நாடக நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் கருத்தை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். இது தொடர்பாக நீதிபதிகள், “இந்த காலகட்டத்தில் நாம் அனைவருமே மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கப்படுகின்றோம். எனவே அதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் எத்தகைய கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதில், சமூக ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் போது, ​​நீதித்துறையை சேர்ந்தவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளின் போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகியிருக்கிறது. எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிவுறுத்தல்களை கேட்டு, இரண்டு நாள்களுக்குள் கர்நாடக உயர்நீதிமன்றம் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறும்.” எனக் கடும் கண்டனங்களுடன் வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.