சேலம்: கோழிப்பண்ணையில் அரசு அதிகாரி எனக் கூறி, மிரட்டிப் பணம் பறிப்பு.. பாஜக முன்னாள் நிர்வாகி கைது!

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லையில் இயங்கிவரக்கூடிய கோழிப்பண்ணை ஒன்றில் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் என்று கூறி சிலர், மிரட்டி பணப் பறிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கோழிப்பண்னை உரிமையாளர்கள் எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை செய்துள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “அரசு அதிகாரி என்று கூறி பணப் பறிப்பில் ஈடுபட்டவர்கள் சேலம், சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஐயனார் மற்றும் அவரது நண்பரான ரவி. இருவரும் டாஸ்மாக்கில் குடிக்கும்போது நண்பர்களானவர்கள். இதில், ஐயனார் சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க ஓ.பி.சி அணியில் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஐயனார் – ரவி ஆகிய இருவரும் தங்களை நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் என்று கூறி சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு காரில், `கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா’ என்று ஒட்டிக்கொண்டு, பல்வேறு அரசு துறைகளை தேவைக்கேற்ப சேர்த்துக்கொண்டு, போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மிரட்டி 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

கார் வாகனம்

இந்த நிலையில்தான் நேற்று இருவரும் ஒரு கோழிப்பண்ணையில் புகுந்து மிரட்டலில் ஈடுபட்டிருந்தபோது உரிமையாளர் சந்தேகமடைந்து, போலீஸுக்கு தகவல் அளித்தார். அதன்மூலம் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. ஏற்கெனவே இருவரும் பல விதத்தில் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. அதற்கு சப்போர்ட்டாக பா.ஜ.க-வில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளோரின் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சேலத்தைச் சேர்ந்த இரண்டு காவல் அதிகாரிகளிடம் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். அதன்மூலம் தான் இவ்வளவு நாளாக தப்பித்து வந்ததும் தெரியவந்தது” என்றனர்.

இது குறித்து சேலம் பா.ஜ.க வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஐயனார் ஏற்கெனவே பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், வீடு வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதனை தெரிந்து கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். இருந்தாலும் பா.ஜ.க தொண்டன் என்று கூறிக்கொண்டு இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளார்” என்றனர்.