மாவட்டச் செயலாளர்களுக்கு `செக்’ கலைத்து ஆடும் ஸ்டாலின்… சூடாகும் அறிவாலயம்!

சூடாகும் அறிவாலயம்!

தி.மு.க-வில், அமைப்புரீதியாக 72 மாவட்டங்கள் இருக்கின்றன. அதில், இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தொடங்கி, ஆறு சட்டமன்றத் தொகுதி இருக்கும் மாவட்டங்கள் வரை இருக்கின்றன. அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்களைப் பிரித்து, இரண்டு அல்லது மூன்று தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருக்கிறது. “கட்சியில் அமைப்புரீதியாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்” என அமைச்சர் உதயநிதியும் பேசியிருந்தார்.

சமீபத்தில், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், மாவட்டங்கள் பிரிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில்தான், சில முக்கிய முடிவுகளைக் கட்சித் தலைமை எடுத்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் மொத்தம் 72 மாவட்டங்களாகப் பிரிந்திருக்கிறது திமுக. அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்களைப் பிரித்து, மாவட்ட அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்திருக்கிறது மேலிடம். அதுதொடர்பாக, ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆலோசனையில் கட்சியின் சீனியர்களான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். முதற்கட்டமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களை மட்டும் பிரிக்கலாம் என ஆலோசித்திருக்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர்களுக்கு ‘செக்’ – கலைத்தாடும் ஸ்டாலின்!

சென்னையில், திமுக-வுக்கு ஆறு மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. இந்த ஆறு அமைப்புகளில், அமைச்சர் சேகர்பாபு வசமிருக்கும் சென்னை கிழக்கு மாவட்டத்தின் கீழ் ஆறு சட்டமன்றத் தொகுதிகளும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வசமிருக்கும் சென்னை தெற்கு மாவட்டத்தின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் வருகின்றன.

இவர்களுடைய மாவட்டத்தைப் பிரித்து, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்திருக்கிறது மேலிடம். அதேபோல, ஆர்.டி.சேகர் வசமிருக்கும் சென்னை வடக்கு மாவட்டத்திலும் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக உருவாகவுள்ள மாவட்டங்களுக்கு, அமைச்சர் மா.சு-வின் தீவிர ஆதரவாளர் ஒருவருக்கும், வடசென்னையில் இளைஞரணியில் உள்ள பிரமுகர் ஒருவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவிருக்கின்றன.

ஸ்டாலின்

காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரைக் காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு என்று இரண்டு மாவட்டங்கள் இருக்கின்றன. அதனை நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி, காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் சுந்தருக்கும், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் படப்பை மனோகரனுக்கும், ஆலந்தூர், திருப்போரூர், பல்லாவரம் ஆகிய தொகுதிகள் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஒதுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஓங்கும் உதயநிதி கை!

திருப்பூரில், திருப்பூர் தெற்கு – வடக்கு என இரண்டு மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராக க.செல்வராஜ்ஜும், தெற்கு மாவட்டச் செயலாளராக இல.பத்மநாபனும் இருக்கின்றனர். அவர்களின் மாவட்டத்தை உடைத்துப் பிரித்து, புதிதாக திருப்பூர் மாநகரம், திருப்பூர் கிழக்கு என இரண்டு மாவட்ட அமைப்புகளை புதிதாக உருவாக்க ஆலோசித்திருக்கிறது மேலிடம்.

திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் வசம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அவரிடமிருக்கும் தாராபுரம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பை உருவாக்கவும், அதன் மாவட்டச் செயலாளராக இல.பத்மநாபனை நியமிக்கவும் ஆலோசித்திருக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயகுமார் நியமிக்கப்படலாம்.

ஸ்டாலின் – உதயநிதி

அதேபோல, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களிலும் அமைப்புரீதியாக புதிய மாவட்டங்களை உருவாக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கோவையைப் பொறுத்தவரையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கை காட்டுபவருக்கே பதவி வழங்கப்படும். அதற்காக, அவரிடம் ஆலோசனைக் கேட்கவும் தலைமை முடிவெடுத்திருக்கிறது.

திருவள்ளூரில், மத்திய, கிழக்கு, மேற்கு என மூன்று மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் டி.ஜெ.கோவிந்தராஜன் மீது கட்சி ரீதியாக தொடர் புகார்கள் வருவதால், அவர் நீக்கப்பட்டு புதிதாக ஒருவர் நியமிக்கப்பட அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது. மாவட்ட அமைப்புகளிலும் மாற்றங்கள் வரலாம். திருப்பூரைப் போலவே திருவள்ளூரிலும் உதயநிதி தரப்பு ஆதரவாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பட்டியல்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த பட்டியலில் கடைசி நேரச் சிறு மாறுதல்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. காஞ்சியில் பவளவிழா முடிவடைந்ததும் மேற்சொன்ன அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்கள் விரிவாக.