திருப்பதி லட்டு விவகாரம்: தேசிய அளவில் கோயில்களுக்குத் தனி வாரியம் அமைக்க பவன் கல்யாண் கோரிக்கை

“திருப்பதி கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்குக் கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும்” என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுத்திருந்தது.

Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடு

ஆனால் இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்ப, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இவை பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

“திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இது போன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ நேரம் வந்துவிட்டது. சனாதன தர்மம் எந்த வடிவத்திலும் இழிவுபடுத்தப்படுவதைத் தடுக்க நாம் அனைவரும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.