`கூட்டணி பிளவு பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் முதல்வர் இப்படிச் செய்கிறார்’- ராஜன் செல்லப்பா

“முதல்வர் ஸ்டாலின், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கொண்டு வந்ததாகக் கூறுகிறார். அது வெறும் காகித பரிமாற்றம்தான்..” என்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்

ஸ்டாலின்

மதுரை ஒத்தக்கடையில் நடந்த அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும்போது, “அறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு தி.மு.க-வினர் பேருக்கு ஒரு கூட்டத்தை நடத்தி விட்டு முடித்து விடுகிறார்கள்.

தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியபோது தமிழகம் முழுவதும் கலவரம் வெடித்தது. எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட ஜெயலலிதா அன்று தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார். தாலிக்குத் தங்கம், ஸ்கூட்டர் என பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே வழியில் பதவிக்கு வந்து செயல்பட்டவர்தான் எடப்பாடியார்.

எடப்பாடியார் ஆட்சி மூன்று நாளில் முடிந்து விடும், முப்பது நாளில் முடிந்து விடும், மூன்று மாதத்தில் முடிந்து விடும் என்று கூறினார்கள். நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பாக ஆட்சி செய்தார். கடந்த சில நாள்களாக இந்த ஆட்சியில் சில நாடகங்கள் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். முதல்வர் ஸ்டாலின், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கொண்டு வந்ததாக கூறுகிறார். அது வெறும் காகித பரிமாற்றம்தான்.

தி.மு.க கூட்டணி பிளவு பட்டுவிடக் கூடாது என்கிற அச்சத்தில்தான் முதல்வர் தினமும் விழா எடுக்கிறார். 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர், தாலிக்குத் தங்கம், லேப்டாப் என அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை திட்டமும் கிடைக்கும்.

மினி கிளினிக்கை மூடிவிட்டு வீடு தோறும் மருத்துவம் என்றார்கள். எங்காவது எந்த வீட்டிற்காவது மருத்துவர் சென்றாரா? எந்த திட்டத்தையும் தி.மு.க முழுமையாகச் செய்யாது‌.

பொதுக்கூட்டத்தில்

2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் 2 கோடியே 16 லட்சம் பேருக்கு 2,000 ரூபாய் கிடைக்கும். இந்த ஆட்சியில் மின்கட்டணம் மூன்று மடங்கும், வீட்டு வரி இரண்டு மடங்கும், பால் விலையும் உயர்ந்து விட்டது.

பெரிய சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய சென்றால், திடீரென சர்வர் வேலை செய்யவில்லை என்றும் டெக்னிக்கல் பிராப்ளம் என்றும் கூறுவார்கள். மாமூல் கட்ட வேண்டியதை கட்டினால் பதிவு நடக்கும். தினமும் கொலைகள் நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று கொலைகள் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தி.மு.க கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது.

மதுரையில் அமைச்சர் வீட்டு முன்பு கொலை நடந்தது, திருநெல்வேலியில் நடந்த கட்சி பிரமுகர் கொலை சம்பவத்தில் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க‌முடியவில்லை. சென்னையில் இரண்டு பேரை என்கவுன்டர் செய்தால் சட்ட ஒழுங்கு சரியாகிவிடுமா?

மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் நூலகம் மட்டும்தான் கொண்டு வந்தார்கள். வேறு எதுவும் கொண்டு வரவில்லை. 150 கோடியில் நூலகம் அமைத்ததற்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கோடி ரூபாய் என கொடுத்திருந்தால் ஊராட்சிகள் வளர்ச்சி பெற்றிருக்கும்.

சமீபத்தில் ஒத்தக்கடையில் நடந்த விழாவில் 10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தார்கள். ஆனால், அதற்கான இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பட்டா என்று பேப்பரைத்தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் சாதாரணமானவர்கள் இடம் வாங்க முடியவில்லை. இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் கட்டடம் கட்ட அப்ரூவல் ஆகிறது” என்று பேசினார்.