மகாராஷ்டிரா தேர்தல்: தொகுதி பங்கீட்டில் சிக்கல்… அடம்பிடிக்கும் காங்கிரஸ்; தீவிரம் காட்டும் பாஜக!

நெருங்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்..

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாக்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணியாக மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), சிவசேனா (உத்தவ்) கட்சிகள் ஏற்கனவே ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளன.

இதில் மும்பையில் உள்ள 36 தொகுதிகள் குறித்து பேசி முடிவு செய்யப்பட்டது. அதிலும் சில தொகுதிகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. அடுத்த கட்டமாக எதிர்க்கட்சி கூட்டணியில் நேற்று தொடங்கி மூன்று நாள்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பாக மாநிலத் தலைவர் நானாபட்டோலே, சிவசேனா சார்பாக சஞ்சய் ராவுத், தேசியவாத காங்கிரஸ் சார்பாக ஜிதேந்திர அவாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மூன்று கட்சிகளும் ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளை அந்தந்த கட்சிகளே வைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

`135 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்!’

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டதற்கு, ”மகாவிகாஷ் அகாடி கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதியில் எந்த சிக்கலும் இல்லை. எஞ்சிய தொகுதிகள் குறித்துதான் அடுத்த 2 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும்.

காங்கிரஸ் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 13 தொகுதியில் வெற்றி பெற்று இருப்பதால் அக்கட்சி 135 தொகுதிகள் கேட்கிறது. தேசியவாத காங்கிரஸ் 90 தொகுதியும், சிவசேனா 100 தொகுதிகளையும் கேட்கிறது. அனைத்து கட்சிகளும் தங்களது எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் தொகுதி பங்கீட்டை சுமூகமாக தீர்க்க முடியும்”என்றார்.

சஞ்சய் ராவுத்

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத் கூறுகையில்,”மூன்று கட்சிகளும் இணைந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யவேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் பிஸியாக இருக்கின்றனர். பேச்சுவார்த்தையை முடிக்காமல் தொடர்ந்து நீட்டித்துக்கொண்டே செல்கின்றனர். மூன்று நாள்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். மும்பையில் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனால் மாநிலத்தின் ஒவ்வொரு மண்டலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது”என்றார்.

விதர்பாவில் காங்கிரஸ் செல்வாக்குடன் இருக்கிறது. அங்கு 29 தொகுதிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 33 தொகுதிகளுக்கு தீர்வு காணவேண்டியிருக்கிறது. இதே போன்று ஒவ்வொரு பகுதியிலும் சிக்கல்கள் இருந்து கொண்டிருக்கிறது.

பாஜக கூட்டணியில் குழப்பம்

இதே போன்று பா.ஜ.க தலைமையிலான கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க எப்படியும் 150 தொகுதிக்கு குறைவான இடங்களில் போட்டியிடுவதில்லை என்பதில் தீவிரமாக இருக்கிறது. 155-160 தொகுதியில் போட்டியிட்டு 125 தொகுதியில் வெற்றி பெறவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் முதல்வர் பதவியை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிடலாம் என்று பா.ஜ.க கருதுகிறது. மற்றொரு புறம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் 90 தொகுதியாவது தங்களுக்கு வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது.

அஜித்பவார்

இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவார் இது குறித்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அவரது அரசு இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளும் சில தொகுதிகளை மாற்றிக்கொள்வது குறித்து பரிசீலித்ததாக கூறப்படுகிறது. அதோடு அஜித்பவார் நேற்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து முக்கிய ஆலோசனையும் நடத்தியுள்ளார்.