அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்திலுள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கியபடி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். திடீரென விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவி, 2022 ஜனவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்தவுடன், அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத்தின் செயலாளர் முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
அந்த வீடியோவில் உயிரிழந்த மாணவி, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு விடுதி வார்டன் கட்டாயப்படுத்தினார் எனக் கூறுவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பா.ஜ.க தரப்பில் தமிழ்நாட்டிலும், பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான APVP சார்பில் டெல்லியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதே நேரம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட மாணவியின் மற்றொரு வீடியோவும் வெளியானது. அதில், “வார்டன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் என்னை செய்யச் சொன்னார்கள். வேலை அதிகமாக வாங்கியதால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் விஷம் குடித்துவிட்டேன்” எனப் பேசியிருக்கிறார்.
இதில் மதமாற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா , நான்கு பேர்கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
இதை கடுமையாக எதிர்த்த, மைக்கேல்பட்டி கிராம மக்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம், “மாணவி தற்கொலையைவைத்து மதரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்கள் ஊரின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றன. பள்ளியில் மத மாற்றம் என்பது நடக்கவில்லை. சிலர் மறைமுகமாக வந்து எங்கள் ஊர் மக்களிடம் குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாகப் பேசுங்கள் என நிர்பந்தம் செய்கின்றனர்.
மாணவி இறப்புக்கு மதமாற்றம் காரணம் எனக் கூறுவது சரியல்ல. விசாரணையில் உண்மை தெரியவரும். பா.ஜ.க குழு உள்ளிட்ட எந்தக் குழுவும் எங்கள் ஊருக்கு விசாரணைக்கு வரக் கூடாது.” என வெளிப்படையாக மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில்தான், மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, பள்ளி நிர்வாகி சகாயமேரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “மாணவி உயிரிழப்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை மதம் மாறுமாறு யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் என் மீது சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ தரப்பில், “இந்த வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. 265 ஆவணங்களும் 7 பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாணவியை மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. அதேநேரம், நன்றாகப் படித்த மாணவியை பிற வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். அதனால்தான் , அவர் கல்வியில் பின்தங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால்தான் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கூடாது” என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.