மேலூர்: கந்துவட்டிக் கொடுமையால் கடைக்காரர் தற்கொலை; ஆபத்தான நிலையில் மனைவி – பரிதவிக்கும் மகள்கள்!

கந்துவட்டிக் கொடுமையால் பேக்கரி கடைக்காரர் தற்கொலை செய்துகொண்டதும், அவர் மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பதும், மேலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் பெற்று அவர்களால் அவமானப்படுத்தப்பட்டும், தாக்குதலுக்கு உள்ளாகியும், சொத்துகளை இழப்பது மட்டுமன்றி, உயிரை இழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இக்கொடுமைகளின் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம், மேலூர் அருகே கத்தப்பட்டியைச் சேர்ந்த ராஜா (வயது 42) என்பவர், தன் பேக்கரி கடைக்காக மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சிவா, அலங்காநல்லூரைச் சேர்ந்த வினோத் ஆகியோரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதோடு அவர் மனைவி மாலைச்செல்வியும் ஊரில் சிலரிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் வட்டி செலுத்தி வந்துள்ளனர்.

ராஜா

ஒரு கட்டத்தில் வியாபாரம் நலிவடைந்து போதிய வருமானம் இல்லாத நிலையில், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடிக்கு ராஜாவின் குடும்பம் உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில்தான் சில நாள்களுக்கு முன் கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்களுடன் சேர்த்து தற்கொலை செய்துகொள்ள ராஜாவும் அவர் மனைவி மாலைச்செல்வியும் முடிவு செய்துள்ளனர். இதில் மகள்களை விட்டுவிட்டு இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்த நிலையில், விஷயம் தெரிந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் ராஜா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழக்க, மாலைச்செல்வி ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். இரண்டு மகள்களும் என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். இதில் தங்கள் மகள்களுக்கு பாதுக்காப்பு வழங்கும்படி ராஜா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

கந்துவட்டி

அதைத் தொடர்ந்து மேலூர் காவல்துறை வழக்கு பதிவுசெய்து கந்துவட்டி கேட்டு டார்ச்சர் செய்த வினோத், சிவா ஆகியோரை கைதுசெய்துள்ளது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.