1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாளன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு தி.மு.க-வின் 75-வது ஆண்டை முன்னிட்டு பவள விழா நடத்த தி.மு.க திட்டமிட்டது. அதன்படி, சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தி.மு.க-வின் பவள விழா மற்றும், பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் என முப்பெரும் விழா ஆகிய இரண்டையும் ஒன்றாக நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தற்போது நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது. தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கும், இந்த விழாவில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர்கள், தி.மு.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த இரண்டு பிரமாண்ட நாற்காலிகளில் ஒன்றில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, மற்றொன்றில் செயற்கை தொழில்நுட்பம் (AI) மூலமாக கலைஞர் கருணாநிதி அமர வைக்கப்பட்டிருந்தார். மேலும், AI தொழில்நுட்பம் வாயிலாக கருணாநிதி உரையாற்றினார். தொடர்ந்து மண்டல வாரியாக கழக நிர்வாகிகளுக்கு இந்த ஆண்டுக்கான கழக விருது சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான பொற்கிழியை ஸ்டாலின் வழங்கினார். மேலும், இந்தாண்டுக்கான பெரியார் விருதையும் ஸ்டாலின் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த வாய்ப்பைத் தந்த கழக தலைவர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி. கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாமா அவர்களே, கழக பொருளாளர் டி.ஆர்.பாலு மாமா அவர்களே மற்றும் வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது உரையைத் தொடங்கினார். உதயநிதி உரையைத் தொடர்ந்து, இந்தாண்டுக்கான அறிஞர் அண்ணா விருதை வழங்கினார் ஸ்டாலின் வழங்கினார்.
அதையடுத்து, உரையாற்றிய மூத்த அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் நேரு ஆகியோரை வரவேற்று, `வருங்கால தமிழகம் உதயநிதிக்கு வணக்கம்’ என்றார்.