Dharavi : கட்டுமான பணி தொடக்கம்; தாராவி குடிசைவாசிகளுக்கு குப்பை கிடங்கில் வீடு – கிளம்பிய எதிர்ப்பு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் மும்பை தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டம், நீண்ட இழுபறிக்குப் பிறகு டெண்டர் மூலம் அதானி நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணி முழுவேகத்தில் நடந்து வருகிறது. ஏற்கெனவே 40 ஆயிரம் குடிசைகளை கணக்கெடுத்து முடித்துள்ளனர். இக்குடிசைகள் ஒவ்வொன்றும் 1, 2, 3 மாடிகள் கொண்டதாக இருக்கிறது. இதில் கீழ்தளத்தில் இருக்கும் குடிசைகள் அதுவும் 2000-ம் ஜனவரிக்கு முன்பு கட்டப்பட்ட குடிசைகளுக்கு மட்டும் தாராவியில் இலவச வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு பிறகு கட்டப்பட்ட குடிசைகள் மற்றும் மாடியில் இருக்கும் வீடுகள் இலவச மாற்று வீடுகள் பெற தகுதியானவை கிடையாது. அப்படிப்பட்ட குடிசைவாசிகளுக்கு வாடகை வீடு திட்டத்தின் கீழ் தாராவிக்கு வெளியில் வீடுகளை ஒதுக்க மாநில அரசும் அதானி நிறுவனமும் முடிவு செய்துள்ளது.

கணக்கெடுப்பு செய்யப்பட்ட குடிசை

2000-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மீது இரண்டடுக்கு வீடுகள் கட்டப்பட்டு இருந்தால், அதில் கீழ் தளத்திற்கு இலவச வீடும், மேலே இருக்கும் இரண்டு மாடிக்கும் சேர்த்து ஒரு வீடும் வாடகை வீடு திட்டத்தில் வழங்கப்படும். வாடகை வீடு திட்டத்திற்கு வீடுகள் கட்டுவதற்கு அதிக அளவில் நிலம் தேவையாக இருக்கிறது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு 256 ஏக்கர் உப்பள நிலத்தை ஒதுக்கி இருக்கிறது. இது தவிர பாண்டூப், விக்ரோலி மற்றும் குர்லாவில் உள்ள காலி இடத்தில் தாராவி மக்களுக்கு மாற்று வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. வடாலாவில் உள்ள உப்பள நிலம், தகிசரில் உள்ள ஆக்ட்ராய் நாக்கா நிலத்திலும் தாராவி குடிசைவாசிகளுக்கு வீடு கட்ட திட்டமிடப்பட்டது.

குப்பை கிடங்கில் தாராவி மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டம்!

ஆனால் அப்பகுதி மக்கள் தாராவி மக்களை தங்களது பகுதியில் குடியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் தாராவியில் இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவ்னார் குப்பை கிடங்கில் தாராவி மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தேவ்னார் குப்பை கிடங்கு 326 ஏக்கர் பரப்புடையது ஆகும். அங்கு 1927-ம் ஆண்டில் இருந்து குப்பைகள் போடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு குப்பை போடப்படவில்லை. ஆனால் ஏற்கெனவே போடப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் கிடக்கிறது. அதிலிருந்து விஷவாயு வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த இடத்தில் 70 ஏக்கரில் தாராவி மக்களுக்கு மாற்று வீடு கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் புஷன் தெரிவித்துள்ளார்.

தேவ்னார் குப்பை கிடங்கு இருக்கும் நிலம் தாராவி மக்களுக்கு வீடு கட்ட அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரா கூறுகையில், “தாராவி குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்ட, தேவ்னார் குப்பை கிடங்கில் உள்ள 70 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார். ஆனால் தாராவி மக்களை குப்பை கிடங்கிற்கு அனுப்ப காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தாராவியை உள்ளடக்கிய தென்மத்திய மும்பை சிவசேனா எம்.பி அனில் தேசாய் கூறுகையில், ”தாராவி மக்களை தாராவியில்தான் குடியமர்த்தவேண்டும். அதற்கு தேவையான நிலம் தாராவியில் இருக்கிறது” என்றார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நசீம் கான் இது குறித்து கூறுகையில், ”தாராவி மக்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது. அதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்” என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பு!

இதற்கிடையே தாராவி குடிசைவாசிகளுக்கு மாற்று வீடு கட்டும் திட்டத்தை அதானி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இத்திட்டத்திற்காக ரயில்வேயிடமிருந்து மாட்டுங்காவில் வாங்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டும் பணி தொடங்கி இருக்கிறது. இப்பணிகளை தொடங்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எளிய முறையில் தொடக்க விழாவை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்கிவிட்டனர். ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் இடிக்கப்படும். அதில் 20 முதல் 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். முதற்கட்டமாக அந்த வீடுகள் கட்டப்பட்ட பிறகு அதற்கு தாராவி குடிசைவாசிகள் மாற்றப்படுவார்கள். ஒவ்வொரு கட்டடத்திலும் 5 அடுக்கு வாகன நிறுத்தும் வசதி, ஹால், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம் கட்டப்படும். ரயில்வேயிடமிருந்து தற்போது 29 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது.